உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கிம்ஸ் மருத்துவமனையில்  லோக் ஆயுக்தா ரெய்டு

 கிம்ஸ் மருத்துவமனையில்  லோக் ஆயுக்தா ரெய்டு

ஹூப்பள்ளி: ஹூப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனையில், மருந்துகளை வெளியே வாங்கி கொள்ளும்படி டாக்டர்கள் கூறுவதாக புகார் எழுந்த நிலையில், நேற்று லோக்ஆயுக்தா எஸ்.பி., சித்தலிங்கப்பா தலைமையிலான குழுவினர், மருத்துவமனையில் சோதனை நடத்தினர். ஹூப்பள்ளியில் உள்ள கே.எம்.சி.ஆர்.ஐ., என்ற 'கிம்ஸ்'அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, ஒழுங்காக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும், நோயாளிகள் மருந்துகளை வெளியே வாங்கி கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல, அக்டோபர் மாதம் ஊசி மருந்தில்லை எனக்கூறி நோயாளியை இரவு வரை காக்க வைத்தது குறித்த வீடியோவும் வெளியானது. இப்படி இந்த மருத்துவமனையின் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதையடுத்து, நேற்று தார்வாட் லோக் ஆயுக்தா எஸ்.பி., சித்தலிங்கப்பா தலைமையிலான குழுவினர், மருத்துவமனையில் அதிரடியாக சோதனை நடத்தினர். ஆவணங்கள், மருந்துகள் கையிருப்பு போன்றவற்றை ஆய்வு செய்தனர். மருத்துவர்களிடம் விசாரிக்கப்பட்டது. பின், சித்தலிங்கப்பா அளித்த பேட்டி: ஹூப்பள்ளி மருத்துவமனையில், நோயாளி ஒருவர் மருந்தின்றி சுற்றித்திரியும் வீடியோ, அக்டோபர் மாதம் வெளியானது. இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. லோக் ஆயுக்தா துணை நீதிபதி வீரப்பா விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வலியுறுத்தினார். அதனால், சோதனை நடத்தப்பட்டது. சிகிச்சை முறை, துாய்மை, நிர்வாக அமைப்பு குறித்து விசாரித்து வருகிறோம். 12 குழுக்களாக, 40 ஊழியர்கள் சோதனை செய்து வருகிறோம். நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள குறைகள் குறித்து கருத்தும் கேட்கப்பட்டு வருகிறது. அடுத்த நகர்வுகள் குறித்து பின்னர் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை