| ADDED : நவ 22, 2025 05:09 AM
பெங்களூரு: பெங்களூரில் தனியார் நிறுவன வேனில் இருந்து கொள்ளையடித்த ஏழு கோடி ரூபாயில் இருந்து 5.30 கோடி ரூபாய் மீட்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீஸ் ஏட்டு உட்பட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். பெங்களூரு ஜே.பி., நகரில் உள்ள ஹெச்.டி.எப்.சி., வங்கியில் இருந்து, அதன் ஹெச்.பி.ஆர்., லே - அவுட் கிளைக்கு, 19ம் தேதி சி.எம்.எஸ்., என்ற நிறுவனத்திற்கு சொந்தமான வேனில் அனுப்பி வைக்கப்பட்ட 7.11 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க தெற்கு மண்டல டி.சி.பி., லோகேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை ஆந்திராவின் திருப்பதி, சித்துாரில் போலீசார் தேடுகின்றனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற கார், சித்துாரில் மீட்கப்பட்டது. காருக்குள் பணம் எதுவும் இல்லை. போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில், சி.எம்.எஸ்., நிறுவன முன்னாள் ஊழியர் சேவியர் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இவருக்கும், கோவிந்தபுரா போலீஸ் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் ஏட்டு அன்னப்பா நாயக்கிற்கும் இடையே நட்பு இருப்பதும், இவர்கள் இருவரும் சேர்ந்து, கல்யாண்நகர் பகுதியை சேர்ந்தவர்களுடன் இணைந்து கொள்ளை அடித்திருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சேவியர், அன்னப்பா நாயக்கை சி.சி.பி., போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களை தவிர மேலும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரிப்பதாகவும், கொள்ளையர்களிடம் இருந்து 5.30 கோடி ரூபாய் மீட்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் போலீஸ் தரப்பில் இத்தகவல் வெளியிடப்படவில்லை. தலைமறைவாக உள்ள, மேலும் சில கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெங்களூரை விட்டு வெளியேறியதும், கொள்ளையர்கள் காரில் உத்தர பிரதேச மாநில பதிவெண் பலகையை பொருத்தியதும் தெரிய வந்துள்ளது.