உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கார் மீது குத்தாட்டம் போட்டவர் தர்ம அடியுடன் போலீசிடம் ஒப்படைப்பு

 கார் மீது குத்தாட்டம் போட்டவர் தர்ம அடியுடன் போலீசிடம் ஒப்படைப்பு

மேக்ரி சதுக்கம்: கார் மீது ஏறி, 'குத்தாட்டம்' போட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியவருக்கு, வாகன ஓட்டிகள் தர்ம அடி கொடுத்து, போலீசிடம் ஒப்படைத்தனர். மைசூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணிபுரிபவர் சந்தோஷ் பத்ரிநாத். இவர், நேற்று காலையில் மைசூரில் இருந்து பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்திற்கு முன்பதிவு டாக்சி மூலம் வந்து கொண்டிருந்தார். பெங்களூரு மேக்ரி சதுக்கத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் இருந்தது. டாக்சி மெதுவாக சென்றது. ஆத்திரமடைந்த சந்தோஷ், வேகமாக செல்லும்படி ஓட்டுநரிடம் கூறினார். 'போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் நான் என்ன செய்ய முடியும்?' என்றார் ஓட்டுநர். கோபத்தில் டாக்சி ஓட்டுநரை சந்தோஷ் தாக்கினார். காரில் இருந்து கீழே இறங்கி, காரின் மேலே ஏறி நின்று வாகன ஓட்டிகளை பார்த்து நடனம் ஆடி வெறுப்பேற்றினார். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஓட்டுநர், வாகன ஓட்டிகள் என, பலரும் கீழே இறங்கி வரும்படி கூறியும் அவர் வரவில்லை. இதனால், அவரது காலை பிடித்து கீழே இழுத்துவிட்டனர். அப்போது, சந்தோஷ் அனைவரையும் தாக்க முயன்றார். இதை பார்த்த சதாசிவநகர் போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளுடன் இணைந்து, அவரை அப்புறப்படுத்த போராடினர். அவர், போலீசார் உட்பட பலரையும் தாக்க முயன்றார். அங்கிருந்த சிலர் ஹெல்மெட்டால் தாக்கி, தர்ம அடி கொடுத்தனர். அடங்காத சந்தோஷின் கைகளை கேபிள் ஒயர்களால் போலீசார் கட்டினர். பின், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, விசாரித்து வருகின்றனர். அந்நபர், மது போதையில் இருந்தாரா, மன நலம் பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை