உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காட்டு யானைகளை விரட்டும் விவகாரம் அரசுக்கு நெருக்கடி தர எம்.எல்.ஏ., உறுதி

காட்டு யானைகளை விரட்டும் விவகாரம் அரசுக்கு நெருக்கடி தர எம்.எல்.ஏ., உறுதி

சிக்கமகளூரு: ''பத்ரா வனப்பகுதிக்குள், 56 காட்டு யானைகள் விரட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று, அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தருவேன்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., நயனா அறிவித்துள்ளார். ஹாசனில் இருந்து சிக்கமகளூரின் பத்ரா வனவிலங்கு சரணாலயத்திற்குள் 56 காட்டு யானைகளை விரட்ட, வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு, சிக்கமகளூரு மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மூடிகெரே தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நயனா தனது ராஜினாமா கடிதத்தை, வழங்கினார். அந்த கடிதம் மீது இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சிக்கமகளூரு, ஹாசன் மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுடன், முதல்வர் சிவகுமார், வனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, வனத்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். இதில், என்ன முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில், காட்டு யானைகள் அட்டகாசத்தை கண்டித்து, மூடிகெரே தாலுகா மாகோனஹள்ளி கிராமத்தில் நேற்று நடந்த போராட்டத்தில், எம்.எல்.ஏ., நயனாவும் பங்கேற்றார்.

இழப்பீடு தீர்வல்ல

அவர் கூறியதாவது: காட்டு யானைகள் விவகாரத்தில், மூடிகெரே தொகுதி மக்கள், விவசாயிகள் குரலாக இருக்கவே நினைக்கிறேன். யானைகள் சேதப்படுத்தும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டும் பிரச்னைக்கு தீர்வல்ல. நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். மூடிகெரே வனப்பகுதிகள் வசிக்கும் யானைகள் இங்கு பிறந்தவை அல்ல. குடகு, பேலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இங்கு வருகின்றன. பின், தானாக தங்கள் இடங்களுக்கு சென்று விடுகின்றன. பட்டாசு வெடித்து யானைகளை துன்புறுத்த வேண்டாம்; அவற்றை அதன் போக்கிலேயே விட்டு விட வேண்டும். நான் அரசிடம் கேட்பது எல்லாம், மக்கள் பாதிக்கக் கூடாது; பயிர்கள் சேதம் அடைய கூடாது அவ்வளவு தான். எனது தொகுதியில் பிரதான தொழிலாக காபி உற்பத்தி உள்ளது. காபி செடிகளை யானைகள் சேதப்படுத்தினால், காபி தொழிலை நம்பி இருக்கும் பலரின் வாழ்வாதாரம் பறிபோய் விடும். காட்டு யானைகள் தனது விளைநிலத்தின் பயிரை சேதப்படுத்தியதாக கூறி, எனது தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் விஷம் குடித்துள்ளார். பத்ரா வனவிலங்கு சரணாலயத்திற்குள், 56 காட்டு யானைகளை விரட்டுவதை தடுக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி தருவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை