திருமண ஆசை காட்டி மோசடி பெண்ணை ஏமாற்றிய நைஜீரியர் கைது
பாகல்கோட்:பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி, லட்சக்கணக்கான ரூபாய் பெற்று மோசடி செய்த, நைஜீரிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகல்கோட் மாவட்டம், இளகல்லில் வசிக்கும் 30 வயதான ஒரு பெண், திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வரன் தேடினார். 2024ல் தன்னை பற்றிய விபரங்களை, திருமண வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இதை கவனித்த நபர், அப்பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார். தன்னை சத்ய அமித் என, அறிமுகம் செய்து கொண்டார். லண்டனில் வசிப்பதாக கூறிக்கொண்டார். அவரை பிடித்திருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாவும் கூறினார். இதற்கு பெண்ணும் சம்மதித்தார். சில நாட்களுக்கு பின், பெண்ணுக்கு போன் செய்த அந்நபர், 'நான் லண்டனில் இருந்து, ஒரு கோடி யு.எஸ்., டாலர்களுடன் இந்தியா வந்துள்ளேன். டில்லி கஸ்டம்ஸ் அதிகாரிகள், பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதை விடுவிக்க இந்திய ரூபாய் தேவை. 5.55 லட்சம் ரூபாய் அவசரமாக வேண்டும்' என்றார். இதை உண்மையென நம்பிய பெண்ணும், அந்நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு, பணத்தை அனுப்பினார். பணம் கைக்கு வந்ததும், அவர் தொடர்பை துண்டித்துக் கொண்டார். நபரின் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண், இளகல் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு பாகல்கோட சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், நைஜீரிய நபர் அரிவர் வுகவோ ஒகிசிகு, 38, என்பவரை மும்பையில் நேற்று கைது செய்தனர். அவரிடம் 4 மொபைல் போன், ஒரு லேப்டாப், பாஸ்போர்ட், யு.எஸ்., டாலர்களை பறிமுதல் செய்தனர். இவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. வேறு ஒருவரின் போட்டோவை போட்டு, பெண்ணை நம்ப வைத்தது, விசாரணையில் தெரிய வந்தது.