தேர்தலில் போட்டியிடாத 10 கட்சிகளுக்கு நோட்டீஸ்
பெங்களூரு: கடந்த ஆறு ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிடாத, மாநிலத்தில் உள்ள 10 அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பும்படி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, மத்திய தேர்தல் கமிஷன் துணை செயலர் கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது: அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் - 1951ன்படி, 29 'ஏ' பிரிவின் கீழ், மத்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்த கட்சிகளுக்கு, வருமான வரி விலக்கு, நட்சத்திர பிரசாரகர்களை பரிந்துரைத்தல் உட்பட பல சலுகைகள் கிடைக்கும். இச்சட்டத்தின் கீழ், தேர்தல் கமிஷனால் நடத்தப்படும் தேர்தல்களில் இக்கட்சிகள் பங்கேற்க வேண்டும். ஆனால், கர்நாடகாவில் உள்ள அகில இந்திய விவசாய கட்சி; ஏழை தொழிலாளர் விவசாயிகள் காங்கிரஸ் கட்சி; பாரதிய ஜனசக்தி காங்கிரஸ்; இந்திய தேசிய மகிளா சர்வோதயா காங்கிரஸ்; டாக்டர் அம்பேத்கர் சமாஜ்வாடி ஜனநாயக கட்சி; ஜன சமாரா கட்சி (கர்நாடகா); மானவ் கட்சி; பிரஜா பரிவர்த்தனை கட்சி; இளம் இந்திய காங்கிரஸ் கட்சி, படவர ஸ்ராமிகர ரைதா கட்சி ஆகிய பத்து கட்சிகள், கடந்த 2019 முதல் ஆறு ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் பங்கேற்கவில்லை. எனவே, இக்கட்சிகளுக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்புங்கள். உள்ளூர், தேசிய நாளிதழ்களில், இக்கட்சிகளின் பெயர்களை பிரசுரிக்க வேண்டும். ஊடகம், சமூக ஊடகங்களில், இது குறித்து விரிவான விளம்பரம் செய்யவும். இக்கட்சி பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்க, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு முழு உரிமை உள்ளது. அவர்களின் கருத்துகளை கேட்ட பின், செப்டம்பர் 1ம் தேதிக்குள், விரிவான அறிக்கையை, இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.