உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடகாவில் சிறு வயது கர்ப்பிணியர் எண்ணிக்கை... 80,000!; குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிர்ச்சி தகவல்

கர்நாடகாவில் சிறு வயது கர்ப்பிணியர் எண்ணிக்கை... 80,000!; குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிர்ச்சி தகவல்

பெங்களூரு : கர்நாடகாவில் ஆண்டுக்காண்டு, சிறு வயது கர்ப்பிணியர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் கர்ப்பம் அடைந்தது குறித்து, மூன்றாண்டுகளில், 80,813 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது குறித்து, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் நாகண்ண கவுடா கூறியதாவது: கர்நாடகாவில் சிறுமியர் கர்ப்பமடைவது, தொடர்ந்து அதிகரிப்பது கவலை அளிக்கிறது. தற்போதைய ஆய்வின்படி, 2023 முதல் 2025 வரை, 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் கர்ப்பமானது தொடர்பாக, 80,813 வழக்குகள் பதிவாகியுள்ளன. இப்போது மாநிலத்தின் வெவ்வேறு மாவட்டங்களில், அதிகமான கர்ப்பிணி சிறுமியர் உள்ளனர். இந்த பட்டியலில் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளது. பெங்களூரில் 8,891, பெலகாவியில் 8,169, விஜயபுராவில் 6,229, துமகூரில் 4,282, ராய்ச்சூரில் 4,100, மைசூரில் 3,952, சித்ரதுர்காவில் 3,448, பாகல்கோட்டில் 3,384, கலபுரகியில் 3,383, பல்லாரியில் 2,677, ஹாசனில் 2,526, உடுப்பியில் 182 கர்ப்பிணி சிறுமியர் உள்ளனர். பள்ளி படிப்பை கைவிட்ட சிறுமியர், குழந்தை திருமணம், ஆசை வார்த்தைகள் காட்டி பலாத்காரத்துக்கு ஆளானது, காதல் நாடகமாடி, திருமணம் செய்வதாக நம்ப வைத்து, தங்கள் இச்சைக்கு சிறுமியரை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் சிறுமியர் கர்ப்பமாவது அதிகரிக்கிறது. போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. சிறுமியர் கர்ப்பமடைவதை கட்டுப்படுத்த, பள்ளி, கல்லுாரிகளில், சட்ட சேவை ஆணையம், சுகாதாரத்துறை மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய சிறார்களை அடையாளம் கண்டு, மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர, நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியர் கர்ப்பமாவது தெரிந்தால், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில், போக்சோ வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த சிறுமியரை பாதுகாப்பது அவசியம். இல்லாவிட்டால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தில், சிறார்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கு, 'காவல் கமிட்டி' அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி சிறுமியர், பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகமல், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த கமிட்டியில் ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா ஊழியர்கள், கிராம கணக்கு அதிகாரி, போலீஸ் இன்ஸ்பெக்டர், பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி இருப்பர். வாரம் ஒரு முறையாவது, காவல் கமிட்டி கூட்டம் நடத்தி, குழந்தை திருமணங்கள், சிறுமியர் கர்ப்பமடைவது, பெண்கள், சிறுமியர் மீதான பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்துவது குறித்து, ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை