குடோனில் பதுக்கிய 2,000 கிலோ யூரியா பறிமுதல்; சித்து அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு
நெலமங்களா: பெங்களூரு அருகே குடோனில் பதுக்கிய 2,000 கிலோ யூரியா பறிமுதல் செய்யப்பட்டது. யூரியா திருட்டில் அரசு ஈடுபடுவதாக, எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம் சாட்டி உள்ளார். கர்நாடகாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்று, குறைந்த அளவிலேயே யூரியா வாங்கிச் சென்றனர். யூரியா தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசே காரணம் என்று, கர்நாடக அரசு குற்றம் சாட்டியது. இந்நிலையில், பெங்களூரு ரூரல் நெலமங்களா தாலுகா கெஜ்ஜகடஹள்ளி கிராமத்தில் உள்ள குடோனில், யூரியா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி, நேற்று காலையில் குடோனுக்கு சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் போது 2,000 கிலோ எடை அளவுக்கு யூரியா பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தாசிர் கான் யூசுப் என்பவர், ஆறு மாதமாக இந்த குடோனை வாடகைக்கு எடுத்து, மாதம் 40,000 ரூபாய் வாடகை செலுத்தி, யூரியாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மத்திய அரசிடம் இருந்து கர்நாடகாவுக்கு வழங்கப்படும் 45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து, குடோனுக்கு கொண்டு வந்து, 50 கிலோ அச்சிடப்பட்ட சாக்குகளில் யூரியாவை மாற்றி, தமிழகத்திற்கு அனுப்பி விற்பனை செய்தது தெரிந்தது. தேடுதல் வேட்டை கர்நாடகா விவசாயிகளுக்கு, 45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டை 266 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், கள்ளச்சந்தையில் 2,000 முதல் 2,500 ரூபாய் வரை விற்றதும் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள தாசிர் கான் யூசுப்பை, டி.ஆர்.ஐ., அதிகாரிகள் தேடுகின்றனர். அவர் கைதான பின்னரே, அவருக்கு யூரியா எங்கிருந்து கிடைத்தது என்பது தெரியவரும். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ''மாநிலத்தில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்ட போது, மத்திய அரசை நோக்கி கை காட்டிய முதல்வர் சித்தராமையாவும், விவசாய அமைச்சர் செலுவராயசாமியும் என்ன சொல்ல போகின்றனர். காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைப்பது, யூரியாவை பதுக்கி வைத்து விற்றதன் மூலம் நிரூபணமாகி உள்ளது. சட்டசபையில் இதுபற்றி விவாதிப்போம்,'' என்றார்.