உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 11 மாவட்டங்களுக்கு 2 நாள் கனமழைக்கான... ஆரஞ்சு எச்சரிக்கை!: மாநிலம் முழுதும் பரவலாக பெய்யும் என தகவல்

11 மாவட்டங்களுக்கு 2 நாள் கனமழைக்கான... ஆரஞ்சு எச்சரிக்கை!: மாநிலம் முழுதும் பரவலாக பெய்யும் என தகவல்

கர்நாடகாவில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பெங்களூரு நகரில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், நகரின் பல சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் நேற்று காலை பணிக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர். போக்குவரத்து நெரிசலால், போலீசார் சிரமத்துக்கு உள்ளாகினர். வட்டரபாளையாவில் இருந்து ஹென்னுார் மற்றும் கெட்டஹள்ளி; ராமமூர்த்தி நகரில் இருந்து கஸ்துாரி நகர்; நாகவாராவில் இருந்து வீரண்ண பாளையா வரை சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தது. இதுபோன்று, வடக்கு மாவட்டங்களின் விஜயபுரா, பாகல்கோட், பெலகாவி, கதக், தார்வாட் உட்பட பல மாவட்டங்களில் பெய்த மழையில், மரங்கள் வேருடன், மின்சார ஒயர்கள் மீது சாய்ந்தன. இதில் பல மின்கம்பங்கள் முறிந்து, மின் தடை ஏற்பட்டது. விஜயபுரா மாவட்டத்தில் தரை பாலத்தை தாண்டி மழை வெள்ளம் செல்வதை அலட்சியப்படுத்தி, 48 வயது நபர் இருசக்கர வாகனத்தில் பாலத்தை கடக்க முயன்றார். அப்போது அடித்து செல்லப்பட்ட அவரை, அங்கிருந்தவர்கள் கயிறு கட்டி, மீட்டனர். அத்துடன் இம்மாவட்டத்தின் பல இடங்களில் மொத்தம் 19 வீடுகளின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. பாகல்கோட்டில் கால்வாய்கள் நிரம்பி, விவசாய நிலத்திற்குள் நீர் புகுந்ததால், விளைச்சல் சேதமடைந்தன. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை, மக்கள் வாளியால் வெளியேற்றினர். அதுபோன்று பல்லாரியில் உள்ள நரிஹல்லா அணையில் இருந்து அளவுக்கு அதிகமான நீர் வெளியேற்றப்பட்டதால், 200 ஏக்கர் சோளம், பருத்தி, நெற்பயிர்கள் நாசமாகின. இந்நிலையில், கர்நாடக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை: அரபிக்கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள், மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களான உத்தர கன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா, மலை மாவட்டங்களான ஷிவமொக்கா மற்றும் சிக்கமகளூரு, சித்ரதுர்கா, துமகூரு, ஹாவேரி, பல்லாரி, தார்வாட், கதக் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, பெங்களூரு ரூரல், கோலார், சிக்கபல்லாபூர், குடகு, ஹாசன், தாவணகெரே, விஜயநகர், ராய்ச்சூர், கொப்பால், கலபுரகி, பீதர் மாவட்டங்களிலும் கன மழை பெய்ய உள்ளதால், 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, மாநிலம் முழுதும் அடுத்த 10 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது. மாநில தலைநகரான பெங்களூரில் கடந்த நான்கு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வரும் 10ம் தேதி வரை இதே நிலையே தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை