| ADDED : டிச 28, 2025 05:00 AM
ஜெயநகர்: ரத்த சோகைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிக்கு, வேறு வகை ரத்தம் செலுத்தியதால், அவரது உடல் நிலை மோசமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பெங்களூரு ஜெயநகரில் உள்ள பொது மருத்துவமனைக்கு, நேற்று முன்தினம் சிகிச்சைக்காக புனித் சூர்யா என்பவர் வந்தார். ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, ரத்தம் செலுத்த வேண்டியிருந்ததால், மருத்துவமனை ஆய்வகத்தில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இவரது ரத்தம், 'ஓ பாசிடிவ்' வகை. ஆனால், ஆய்வக ஊழியர், 'ஏ பாசிடிவ்' என, தவறாக அறிக்கை அளித்திருந்தார். அதன்படி அவருக்கு, 'ஏ'பாசிடிவ்' ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. தவறான ரத்தம் செலுத்தியதால், அவரது உடல் நிலை மோசமானது. ஐ.சி.யு.,வில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர். புனித் சூர்யாவின் உடல்நிலை மோசமாக காரணமான, ஆய்வக ஊழியர் உமேஷ் மீது, திலக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரும் நேற்று மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர். நோயாளிக்கு எந்த வகை ரத்தம் உள்ளதோ, அதே வகையை சேர்ந்த ரத்தத்தை மட்டுமே செலுத்த வேண்டும். மாற்றி செலுத்தினால் காய்ச்சல், சுவாச பிரச்னை, இதய வலி உட்பட பல விதமான பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இது தெரிந்தும், ஏழை நோயாளிகளின் உயிருடன் விளையாடுகின்றனர். சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, நோயாளியின் குடும்பத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.