புத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீசாரின் கழுகு பார்வை அசம்பாவிதங்கள், பாலியல் சீண்டல்கள் தவிர்ப்பு
: பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கடும் கட்டுப்பாட்டு விதிகளுடன், கண்காணிப்பு பணியில் 20,000 போலீசார் ஈடுபட்டதால், பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இதன் மூலம் 'காவல் துறை உங்கள் நண்பன்' என்பதை மீண்டும் போலீசார் நிரூபித்தனர். பெங்களூரின் எம்.ஜி., ரோடு, சர்ச் ரோடு, பிரிகேட் ரோடு, கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமரிசையாக நடப்பது வழக்கம். இதில், பங்கேற்க பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் வருகை தருவர். அவ்வகையில், நேற்று முன்தினம் இரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக லட்சக்கணக்கில் மக்கள் கூடினர். இதில், ஏதும் அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காக முதல் முறையாக 20,000 போலீசார் பணியமர்த்தப்பட்டனர். குறிப்பாக, எம்.ஜி., சாலையில் அதிக கூட்டம் கூடியது. இதை சமாளிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சாலையில் நுழையும் அனைவரையும் ஒரே திசையில் அனுப்பினர். அவர்கள் அனைவரிடமும் ஏதாவது அசம்பாவித பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை போலீசார் சோதித்தனர். மது பாட்டில்கள், கத்தி உட்பட ஆயுதங்கள் போன்றவை இருந்தால் அவற்றை பறிமுதல் செய்து அனுப்பினர். 10 மீட்டருக்கு 1 போலீஸ் கொண்டாட்டங்களில் 'பேக்' வைத்திருந்தோருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அனைவரும் கண்ட கண்ட இடங்களில் அலையாதவாறு இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வேலிகளுக்குள்ளே அனைவரும் நடந்து சென்றனர். இதனால், சாலையில் வாகனங்கள் தடங்கல் மற்றும் நெரிசல் இன்றி சென்றன. 10 மீட்டருக்கு ஒரு போலீசார் வீதம் காவல் புரிந்தனர். நுாற்றுக்கணக்கான தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இந்த கேமராக்கள் ஏ.ஐ., திறன் உடையது. கூட்டநெரிசல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கேமராக்கள் அனைத்தும் போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங், ஒரே நேரத்தில் கண்காணிக்கக்கூடிய வசதிகள் செ ய்யப்பட்டிருந்தது. போலீசாரும், அடிக்கடி மைக்கில் அறிவுறுத்தி வந்ங்கினர். அனைத்து போலீசாரின் சீருடையிலும் சிவப்பு, நீல நிற சிறிய எல்.இ.டி., லைட்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. இதன் மூலம், போலீசார் இருக்கும் இடத்தை பலரும் அறிவதற்கு ஏதுவாக அமைந்தது. 10 அடி உயரத்திற்கு சிறிய அளவிலான கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் கழுகு பார்வையில் காவல் காத்தனர். புகார் அளிப்பவர்களுக்கு ஏதுவாக தற்காலிக உதவி மையங்கள் இருந்தன. சுவர்களில் 'கியு ஆர் கோர்டு' குறியீடுகள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதை 'ஸ்கேன்' செய்து புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. பெரும்பாலான பெட்டி கடைகள் இரவு 10:00 மணிக்கே அடைக்கப்பட்டன. எம்.ஜி., ரோட்டில் உள்ள மதுபான கடைகளில் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டிருந்தன. போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் தடுமாறினர். ரேபிடோ, ஊபர், ஓலா செயலிகளில் வழக்கத்தை விட கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டது. கூட்டநெரிசல் அதிகமாக இருந்த இடங்களில் பெண்களுக்கு தனி வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. தடியடி போலீசாரின் பலத்த கண்காணிப்பால் பெண்களிடம் பாலியல் சீண்டல்கள், கடந்த ஆண்டுகளை விட குறைவாகவே இருந்தது. இதனால், பல பெண்களும் போலீசாருக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி மகிழ்ந்தனர். இது ஒரு புறம் இருக்க குடித்துவிட்டு கும்மாளம் போட்ட ஆண்கள், பெண்கள் சாலையில் விழுந்து கிடந்தனர். அரை குறை ஆடையுடன் சில பெண்கள் குத்தாட்டம் போட்டனர். கும்பலாக நின்றவர்கள் மீது லேசாக தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். நமது நிருபர் -