வி.பி.,- ஜி ராம் -ஜி பெயரை மாற்றும் வரை போராட்டம் தொடரும்: முதல்வர் திட்டவட்டம்
பெங்களூரு: ''விக்சித் பாரத் கியாரன்டி பார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன் - கிராமின்' அதாவது, வி.பி.,- ஜி ராம் -ஜி என்ற பெயரை மீண்டும் மஹாத்மா காந்தி நுாறு நாள் வேலை திட்டம் என, மாற்றம் செய்யும் வரை ஓயமாட்டோம்,'' என, முதல்வர் சித்தராமையா கூறினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, 100 நாட்கள் வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் அமலானது. கடந்த டிசம்பரில் மத்திய அரசு, இத்திட்டத்தின் கீழான வேலை நாட்களை, 125 ஆக அதிகரித்ததுடன், 'வி.பி.,- ஜி ராம் -ஜி' என்ற, 'விக்சித் பாரத் கியாரன்டி பார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன் - கிராமின்' என்று பெயர் மாற்றமும் செய்தது. கடிதம் இதற்கு 'இண்டி' கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நேற்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் அமைச்சரவை சகாக்களுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி: மீண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அமல்படுத்தி, ஏழைகள், தலித்கள், பெண்கள், சிறு விவசாயிகளின் வேலை வாய்ப்பு உரிமைகளையும்; பஞ்சாயத்துகளின் ஸ்வராஜ் உரிமையையும் மீட்டெக்க வேண்டும். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். புதிய சட்டத்தை நிறுத்தி வைத்து, மாநில அரசுடன் ஆலோசனை நடத்தும்படி அவருக்கு கடிதம் எழுதி உள்ளேன். ஊரக வேலை உறுதி திட்டம் என்பது, காந்தியின் கிராம ஸ்வராஜ்ஜிய கனவை நனவாக்கும் திட்டம். கோட்சே காந்தியை கொன்றார். தற்போது இரண்டாவது முறையாக புதிய திட்டத்தின் மூலம், பா.ஜ., காந்தியை கொல்லும் அளவுக்கு வெறுப்பு இருக்கக்கூடாது. போராட்டம் விவசாயிகள் தங்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெற, மத்திய அரசை கட்டாயப்படுத்தினர். அதுபோன்று பொதுமக்கள், தொழிலாளர்கள், அமைப்புகளுடன் இணைந்து 'வி.பி.,- ஜி ராம் -ஜி' சட்டத்தை திரும்ப பெறும் வரை நாங்கள் போராடுவோம். மக்கள் நிம்மதியாக வாழ்வதற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்களை அழிப்பதே, பா.ஜ.,வின் வேலையாகி விட்டது. இதற்கு பா.ஜ.,வின் வழிகாட்டியாக ஆர்.எஸ்.எஸ்., உள்ளது. அதன் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பயனளிக்க மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. திட்டங்களின் பெயர்களை மாற்றுவது தான் பா.ஜ.,வின் சாதனை. கடந்த, 11 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 30 திட்டங்களின் பெயர்களை, பா.ஜ., அரசு மாற்றி உள்ளது அல்லது சட்டங்களை திரும்ப பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.