உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சுங்க அதிகாரிகள் பெயரில் மோசடி பொதுமக்கள் உஷராக இருக்க அறிவுரை

 சுங்க அதிகாரிகள் பெயரில் மோசடி பொதுமக்கள் உஷராக இருக்க அறிவுரை

பெங்களூரு: 'பெங்களூரில் சுங்க அதிகாரிகள் பெயரில், மக்களை ஏமாற்றும் கும்பல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,' என, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். விமான நிலைய சுங்க அதிகாரிகள் கூறியதாவது: சுங்க அதிகாரிகளின் பெயரில், பொது மக்களை தொடர்பு கொண்டு ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். மக்களை தொடர்பு கொள்ளும் மர்மநபர்கள், தங்களை சுங்க அதிகாரிகள் என்று, அறிமுகம் செய்து கொள்கின்றனர். 'வெளிநாட்டில் இருந்து வந்திறங்கிய உங்கள் உறவினரை சுங்க துறையில் பிடித்து வைத்துள்ளோம். அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளார். அவரை சிறையில் அடைக்கப் போகிறோம்' என்று பொய் கூறி நம்ப வைக்கின்றனர். அவரை விடுவிக்க வேண்டுமானால், வரி செலுத்த வேண்டும் என, மிரட்டி லட்சக்கணக்கான ரூபாயை, தங்கள் கணக்குக்கு பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். தங்களின் உறவினர் அல்லது நண்பர்களை காப்பாற்றும் நோக்கில், மக்கள் பணம் அனுப்பி ஏமாறுகின்றனர். இதுபோன்ற மோசடிகள், பெங்களூரில் அதிகரித்துள்ளன. சுங்க அதிகாரிகள், எந்த காலத்திலும் போன், வாட்ஸாப், ஆன்லைன் வழியாக பணம் அனுப்பும்படி கேட்கமாட்டார்கள். தனிப்பட்ட கணக்கு, யு.பி.ஐ., அல்லது டிஜிட்டல் வேலெட்டுக்கு பணம் பரிமாற்றம் செய்யும்படி கூறுவதில்லை. அனைத்து வரிகள், அபராத தொகைகள் விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ கவுன்டர், ஆன்லைன் போர்ட்டல் மூலமாக மட்டுமே பெறப்படுகிறது. பணம் பெற்றதற்கான ரசீதும் அளிக்கப்படுகிறது. வரி விஷயத்தில் எந்த பயணிக்கும், நாங்கள் தொந்தரவு கொடுப்பதில்லை. அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலமாக மேற்பார்வையிடுகிறோம். இத்தகைய மோசடி நபர்கள் தொடர்பு கொண்டால் பொருட்படுத்த வேண்டாம். அழைப்பு வந்தால், commrapacc---gov.inக்கு இ - மெயில் வழியாகவோ அல்லது சைபர் கிரைம் ஹெல்ப் லைன் 1930 ல் தொடர்பு கொள்ளுங்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை