உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நாட்டின் செல்வம் சில குடும்பங்களுக்கு மட்டுமே செல்கிறது; பா.ஜ., கொள்கை குறித்து ராகுல் குற்றச்சாட்டு!

நாட்டின் செல்வம் சில குடும்பங்களுக்கு மட்டுமே செல்கிறது; பா.ஜ., கொள்கை குறித்து ராகுல் குற்றச்சாட்டு!

விஜயநகரா : ''நாட்டின் செல்வம் பணக்காரர்களுக்கு மட்டும் செல்ல வேண்டும் என்பது, பா.ஜ.,வின் கொள்கை,'' என்று, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார்.கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்று இருப்பதை, விஜயநகரா ஹொஸ்பேட்டில் நேற்று மாநாடாக கொண்டாடினர். இதில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதாவது:காங்கிரஸ் அரசு வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளது. மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை அவர்களிடமே திரும்ப கொடுக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இதற்காக தான் ஐந்து வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தினோம். இங்கு பலர் நிலம் வைத்து உள்ளனர். ஆனால் நிலத்திற்கு உரிமை பட்டா இல்லை.வருவாய் துறை சார்பில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட, நில உரிமை கணக்கு இல்லாத பயனாளிகளுக்கு, உரிமை பட்டா வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி உள்ளோம். பட்டா பிரச்னை குறித்து சித்தராமையாவுடன் விவாதித்தேன். நான் நினைத்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. நிலத்திற்கு உரிமை பட்டா வழங்குவது எங்களது, ஆறாவது வாக்குறுதி. கர்நாடகாவில் புதிதாக 500 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்படும்.மக்கள் வரிப்பணம், நாட்டின் செல்வம் இந்த நாட்டில் உள்ள, சில பணக்கார குடும்பங்களுக்கு செல்ல வேண்டும் என்பது பா.ஜ.,வின் கொள்கை. எங்கள் திட்டங்கள் வேலை வாய்ப்பை உருவாக்குகின்றன. கிரஹ லட்சுமி திட்டத்தின் மூலம் பெண்கள் வங்கிக்கணக்கிற்கு மாதம் 2,000 ரூபாய் நேரடியாக செல்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.

சொந்த பலம்

முதல்வர் சித்தராமையா பேசியதாவது:முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 165 வாக்குறுதி அளித்து அதில் 158 ஐ நிறைவேற்றினோம். தற்போது ஐந்து வாக்குறுதி அளித்து அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். மக்களுக்காக இன்னும் நிறைய நல திட்டங்கள் கொண்டு வருவோம். நமது மாநிலம் அமைதி பூங்கா. அனைவரையும் சமமாக மதிப்பவர்கள் கன்னடர்கள். சிலர் பிரச்னைகளை ஏற்படுத்தி விட பார்க்கின்றனர்.மத்திய அரசுக்கு அதிக வரி செலுத்தும் இரண்டாவது மாநிலம் கர்நாடகா. ஆனால், நமது பங்கை தர மறுக்கின்றனர். பத்ரா மேலணை திட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட 5,300 கோடி ரூபாயில் ஒரு பைசா கூட தரவில்லை. கர்நாடகாவில் பா.ஜ., சொந்த பலத்தில் ஆட்சிக்கு வரவில்லை. பின்பக்க வாசல் வழியாக தான் வந்தனர். முந்தைய பா.ஜ., அரசு மீதான 40 சதவீத குற்றச்சாட்டுகளை நிரூபித்து உள்ளோம். கடந்த 2014ல் ஒரு சவரன் 20,000 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை தற்போது 70,000 ரூபாயாக உள்ளது. காஸ் சிலிண்டர் விலை 400ல் இருந்து 1,000 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலைவாசியை உயர்த்துவது மத்திய பா.ஜ., அரசு தான்.இவ்வாறு அவர் பேசினார்.

பசவண்ணர்

துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:அரசின் இரண்டு ஆண்டு சாதனையை கொண்டாட நாங்கள் வரவில்லை. மக்களுக்கு பட்ட கடனை அடைக்க அர்ப்பணிப்பு மாநாடு நடத்துகிறோம். ராகுல், மல்லிகார்ஜுன கார்கே தலைமையின் கீழ் பணியாற்றி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றோம். மக்கள் எங்களை ஆசிர்வசித்து உள்ளனர்.நில உரிமை கணக்கு இல்லாத பயனாளிகளுக்கு, உரிமை பட்டா வழங்கும் திட்டத்தை கொண்டு வந்த, வருவாய் அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, அதிகாரிகளுக்கு எனது பாராட்டுகள்.இரண்டு ஆண்டுகளில் ஊழல் நடப்பதை நிறுத்தி உள்ளோம். பசவண்ணர் வழிகாட்டுதல்படி எங்கள் அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:இரண்டு ஆண்டு ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அரசுக்கு வாழ்த்துகள். அரசு தற்போது தலித் மக்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.நான் ஒருபோதும் இடஒதுக்கீட்டை எதிர்த்ததில்லை. ஆனால் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பேடம ஜங்கமத்தை தலித் பட்டியலில் சேர்ப்பது சரியல்ல. லிங்காயத் சமூக ஏழைகளுக்கு தேவைப்பட்டால் உதவி செய்வோம். ஆனால் பேடம ஜங்கம சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களை தலித் என்று காட்டுவது தவறு. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

ஆலோசனை

மாநாட்டு மேடையில் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் நாற்காலியில் அருகருகே அமர்ந்து கொண்டிருந்தனர். அப்போது, பல அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களிடம் ராகுலிடம் பேச்சு கொடுத்து, நாங்களும் இருக்கிறோம் என டில்லி மேலிடத்தின் தரிசனத்தை பெற முற்பட்டனர்.இந்த சமயத்தில், வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா துவக்க உரையை பேச துவங்கினார். அவர், ராகுலை பற்றி புகழ்ந்து பேசினார். இதனால், அவர் உச்சி குளிர்வார் என எதிர்பார்த்தார்.ஆனால், ராகுலோ அவர் பேச்சை காதில் கூட வாங்காமல், கார்கே, சுர்ஜேவாலா ஆகியோருடன் தீவிரமாக ஆலோசித்து வந்தார். கார்கே கையில் இருந்த காகித்தை வைத்து கொண்டு தீவிரமாக ஆலோசித்தனர். ஒரு கட்டத்தில், நிகழ்ச்சி மேடையில் இருப்பதை மறந்து ராகுல், தொண்டர்களை பார்த்து அமருவதற்கு பதிலாக, கார்கேவின் முகத்தை பார்த்து பேசி துவங்கி விட்டார்.இதை பார்த்த முதல்வர் சித்தராமையா அதிர்ச்சி அடைந்தார். ஆனால், வழக்கம் போல எதையும் கண்டு கொள்ளாமல், தொண்டர்களை பார்த்து அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தார். ஆனால், சிவகுமாரோ தன் நாற்காலியில் இருந்து எழுந்து வந்து, அவர்கள் மூவர் பேசுவதையும் உன்னிப்பாக கேட்க துவங்கினார்.மேடையில் நடப்பதை பார்த்து தொண்டர்கள் மிரட்சியில் இருந்தனர். இதனிடையே, தன் உரையை ராகுல் கேட்கிறாரோ இல்லையோ, கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவரை புகழாமல் மேடையில் இருந்து இறங்க மாட்டேன் என தன் முழு உரையையும் முடித்து கொண்டு கிருஷ்ணபைரே கவுடா இறங்கினார்.இதை எதையும் கண்டு கொள்ளாமல் அவர்கள் மூவரும் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவர்கள் என்ன விஷயம் குறித்து, ஆலோசித்திருப்பர் என்ற கேள்வி எழுந்தது.பிரமாண்ட மேடையில், முக்கிய தலைவர்கள் தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளனர் என்றால், அது முக்கிய விஷயமாகவே இருக்க வேண்டும். இதில் தேசியம் முதல் மாநில அரசியல் வரை பேசி இருப்பர் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை