ஆர்.எஸ்.எஸ்., பாடல் பாடியதற்காக மன்னிப்பு கேட்க தயார்: சிவகுமார்
பெங்களூரு, : ''சட்டசபை கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., பாடல் பாடியதற்காக மன்னிப்பு கேட்க தயார்,'' என, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார். பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி: நான் ஒரு விசுவாசமான காங்கிரஸ்காரன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. சட்டசபை கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., பாடல் பாடியதற்காக, 'இண்டி' கூட்டணி தலைவர்களிடமும், காங்கிரஸ் தொண்டர்களிடமும் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன். காந்தி குடும்பத்தை சேர்ந்தவன்; கார்கேவின் வழிகாட்டுதலின் கீழ் வளர்ந்தவன். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எனக்கில்லை. எம்.ஏ., அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 2008ம் ஆண்டு பட்டம் பெற்றேன். மாணவனாக இருந்தபோது அனைத்து கட்சிகள் குறித்தும் படித்துள்ளேன். கம்யூனிஸ்ட், ஆர்.எஸ்.எஸ்., ஜனதா கட்சி, ஜனதா தளம், முஸ்லிம் லீக் பற்றி எனக்கு தெரியும். காங்கிரஸ் மீதான என் விசுவாசத்தை சந்தேகப்படுவதா? என்னை சிலர் கேலி செய்கின்றனர். அவர்களுக்கு என்னை பற்றி என்ன தெரியும்? காங்கிரஸ் அலுவலகம், எனக்கு கோவில் போன்றது. காந்தி குடும்பம் தான் எனக்கு கடவுள். ஆர்.எஸ்.எஸ்.,ஐ புகழ்வது என் நோக்கமல்ல. பிறக்கும்போது காங்கிரஸ்காரனாக பிறந்தேன்; இறக்கும் போதும் காங்கிரஸ்காரனாகவே இறப்பேன். நான் ஒரு மதச்சார்பற்ற மனிதன். எனக்கு ஜாதி மீது நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.