சாலை பள்ளங்கள் சீரமைப்பு: மாநகராட்சி தீவிரம்
பெங்களூரு: சாலையில் உள்ள 3,287 பள்ளங்களை அடைக்கும் பணியில் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. கிரேட்டர் பெங்களூரு, பிராண்ட் பெங்களூரு, கிரீன் சிட்டி எனும் பல பெயர்களால் அழைக்கப்படும் பெங்களூரின் சாலைகளின் நிலை மிக மோசமாக உள்ளது. நகரின் பெரும்பாலான பிரதான சாலைகளில் பல பள்ளங்கள் உள்ளன. இதனால், பள்ளி மாணவர்கள் நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து மஹாதேவபுரா பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள், துணை முதல்வர் சிவகுமாருக்கு கடிதம் எழுதி உள்ளனர். மழை பெய்து தண்ணீர் தேங்கும் பகுதியில் உள்ள பள்ளங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்ட துணை முதல்வர் சிவகுமார், சில தினங்களுக்கு முன் பெங்களூரு மாநகராட்சிக்ககு சாலைகளை சீரமைப்பது குறித்து கடுமையாக எச்சரித்தார். கடந்த சில நாட்களாக மாநகராட்சி ஊழியர்கள் சாலைகளில் உள்ள பள்ளங்களை அடைக்கும் வேலையில் மும்முரமாக இறங்கி உள்ளனர். முன்னுரிமை விடுமுறை தினமான நேற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இது குறித்து பெங்., மாநகராட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை: நகரின் முக்கிய சாலைகளில் பள்ளங்கள் இருப்பதால், போக்குவரது நெரிசல் பிரச்னை அதிகரித்து உள்ளது. இது தொடர்பாக, போக்குவரத்து போலீசார் 4,614 பள்ளங்களை அடையாளம் கண்டு, முன்னுரிமை அடிப்படையில் பள்ளங்களை அடைக்க வேண்டும் என மாநகராட்சியிடம் கோரினர். இதில், 3,995 பள்ளங்கள் மாநகராட்சி வரம்பிலும், 619 பள்ளங்கள் மாநகராட்சிக்கு அப்பாற்ப்பட்ட பகுதிகளில் உள்ளன. இதன்படி, 3,287 பள்ளங்ளை மாநகராட்சி நிர்வாகம் மூடும். மற்ற பள்ளங்களை பெஸ்காம், குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை துறைகளால் மூடப்படும். இதற்காக, விடுமுறை நாட்களில் சாலைகளில் உள்ள பள்ளங்கள் மூடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இரவிலும் பணிகள் நடக்கின்றன. துணை முதல்வர் சிவகுமார், மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் இருவரின் உத்தரவுப்படி, நேற்று எட்டு மண்டலங்களிலும் சாலை சீரமைக்கும் பணிகள் நடந்தன. மைசூரு சாலை, ெஹாசகேரஹள்ளி, பனசங்கரி, கனகபுரா சாலை, நாகரபாவி உட்பட பல சாலைகளில் இரவு நேரங்களில் பள்ளங்கள் மூடப்படுகின்றன. இந்த பணி இன்றும் நடக்கும். இதற்காக 'ஈகோபிக்ஸ்' இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.