உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மைசூரு சாண்டல் சோப் தயாரிக்க சந்தன எண்ணெய் வாங்கியதில் ரூ.1,000 கோடி ஊழல்; காங்கிரஸ் மீது ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சு பரபரப்பு குற்றச்சாட்டு

மைசூரு சாண்டல் சோப் தயாரிக்க சந்தன எண்ணெய் வாங்கியதில் ரூ.1,000 கோடி ஊழல்; காங்கிரஸ் மீது ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சு பரபரப்பு குற்றச்சாட்டு

மைசூரு மன்னர் நல்வாடி கிருஷ்ணராஜ உடையாரால், 1916ல் மைசூரு சாண்டல் சோப் தொழிற்சாலை நிறுவப்பட்டது. 109 ஆண்டுகள் பாரம்பரியம் உடைய இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மைசூரு சாண்டல் சோப்புக்கு உலகம் முழுதும் நல்ல வரவேற்பு உள்ளது. அதற்கு முக்கிய காரணம் சந்தன எண்ணெயில் தயாரிக்கப்படும் ஒரே சோப்பு என்பதே. தற்போது மைசூரு சாண்டல் சோப் தொழிற்சாலை, கர்நாடக அரசின் தொழில் மற்றும் வணிக துறையின், கர்நாடக மாநில சோப்பு அண்டு டிடர்ஜென்ட் நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது. 2024 - 2025ம் நிதியாண்டில் 1,785 கோடி ரூபாய்க்கு சோப்புகள் விற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், சோப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும், சந்தன எண்ணெய் வாங்கியதில் ஊழல் நடந்ததாக, காங்கிரஸ் அரசு மீது ம.ஜ.த., பரபரப்பு குற்றச்சாட்டு கூறி உள்ளது. மாண்டியாவின் கே.ஆர்.பேட் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ., - ஹெச்.டி.மஞ்சு, பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று அளித்த பேட்டி: மைசூரு சாண்டல் சோப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் சந்தன எண்ணெய் வாங்கியதில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்து உள்ளது. இதுதொடர்பாக எங்களிடம் 800 பக்க அறிக்கை உள்ளது. சந்தன எண்ணெய் வாங்குவதற்கு ஒரே நிறுவனத்திற்கு மட்டும், அதிக முறை டெண்டர் கொடுத்து உள்ளனர். கருப்பு பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கும், டெண்டர் கொடுத்து உள்ளனர். இதுதொடர்பான தகவல்களை பெற, 2022, 2023ல் கர்நாடகா சோப்பு அண்டு டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு கடிதம் எழுதி இருந்தேன். ஆனால், எனக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. கடந்த மே மாதம் மீண்டும் ஒரு முறை கடிதம் எழுதினேன். அப்போது, ஒரு கிலோ சந்தன எண்ணெய் விலை 93,116 ரூபாயாக இருந்தது. ஆனால், நிறுவனத்தினரோ கிலோ சந்தன எண்ணெயை 1.20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளனர். டெண்டர் விடுக்கும் முன், மறு ஆய்வு குழு சந்தை மதிப்பை சரிபார்க்க வேண்டும். அவர்கள் ஒப்புதல் பெற்ற பிறகே டெண்டர் விடுக்க வேண்டும்; பின், டெண்டருக்கு ஒப்புதல் தர வேண்டும். ஆனால், சோப்பு அண்டு டிடர்ஜென்ட் நிர்வாக இயக்குநர், டெண்டர் விடுக்காமல் நேரடியாக பேரம் பேசுகிறார். இங்கு நடக்கும் ஊழல் பற்றி முதல்வருக்கு கடிதம் எழுதியும் அவரிடம் இருந்து பதில் வரவில்லை. இதனால், பெலகாவி குளிர்கால கூட்டத்தொடரில் பிரச்னையை கிளப்புவோம். இந்த ஊழலை எளிதில் விட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து தொழில் மற்றும் வணிக அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியதாவது: சந்தன எண்ணெய் வாங்கியதில், கர்நாடக சோப்பு அண்டு டிடர்ஜென்ட் நிறுவனம் ஏதாவது முறைகேடு செய்து இருந்தால், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். முறைகேடு செய்வதற்கு இது ஒன்றும், மாடல் விருபாக் ஷப்பா அரசு இல்லை; காங்கிரஸ் அரசு. கர்நாடக சோப்பு அண்டு டிடர்ஜென்ட் நிறுவனத்தின் வளர்ச்சியை சிலரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இந்நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்த, சில திமிங்கலங்கள் காத்து உள்ளன. அதற்கு இடம் கொடுக்க மாட்டேன். சந்தன எண்ணெய் வாங்கியது தொடர்பாக, இரண்டு நாட்களில் முழு தகவல்களையும் வழங்குகிறோம். எம்.எல்.ஏ., மஞ்சு பொய் குற்றச்சாட்டுகளை கூறினால், அவரை உதைப்பேன். அவர் மீது அவதுாறு, கிரிமினல் வழக்கு தொடர்வேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை