கிரிப்டோ கரன்சி பெயரில் ரூ.1.30 கோடி அபேஸ்
ஹூப்பள்ளி: 'கிரிப்டோ கரன்சி' பெயரில் லாப ஆசை காட்டி, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தவர் மீது, வழக்கு பதிவாகியுள்ளது. ஹூப்பள்ளி நகரில் வசிப்பவர் ஆப்ரஹாம். சில மாதங்களுக்கு முன், இவருக்கு முகநுால் வழியாக தியாகான் என்ற நபர் அறிமுகமானார். அதன்பின் இருவரும் மெசேஜ் அனுப்பி, சாட்டிங் செய்து நட்பை வளர்த்தனர். இதே போன்று ஒரு நாள் மெசேஜ் அனுப்பிய தியாகான், கிரிப்டோ கரன்சி குறித்து விவரித்தார். இதில் முதலீடு செய்தால், கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம். அதிக லாபம் கிடைக்கும் என, ஆசை காட்டினார். இவரது பேச்சை நம்பிய ஆப்ரஹாமுக்கும், முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. முதலில் சிறிய தொகையை, முதலீடு செய்தார். தியாகான் கூறிய வங்கி கணக்குக்கு பணம் பரிமாற்றம் செய்தார். இதற்கு லாப தொகை வழங்கி, ஆப்ரஹாமின் நம்பிக்கையை பெற்றார். அதன்பின் படிப்படியாக 1.30 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்தார். பணம் கைக்கு கிடைத்ததும், தியாகான் தன் தொடர்பை துண்டித்து கொண்டார். பணத்தை திருப்பி கேட்க, போன் செய்த போது, மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல முறை முயற்சித்தும் பலன் இல்லை. ஏமாந்ததை உணர்ந்த ஆப்ரஹாம், சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் தியாகான் மீது, வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.