கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் பேச்சு பலமாக எழுந்து வரும் நிலையில், சிவகுமாருக்கு '2028 பார்முலா'வை சித்தராமையா ஆதரவாளர்கள் முன்மொழிந்துள்ளனர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோது, சித்தராமையா - சிவகுமார் இடையே இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று தீர்மானிக்கப்பட்டதாகவும், அதன்படி, முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் பதவியேற்றதாகவும் கூறப்பட்டது. இரண்டரை ஆண்டு காலம் முடிவடையும் வேளையில், ஐந்து ஆண்டுகளும் முதல்வராக தொடர வேண்டும் என்று சித்தராமையா விரும்புகிறார். இதற்கு அவரது ஆதரவாளர்களும் 'ஒத்து' ஊதுகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த மூன்று நாட்களாக டில்லியில் சித்தராமையா முகாமிட்டு, கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். அதேவேளையில், வாக்கு கொடுத்தபடி பதவி வழங்க வலியுறுத்தி, கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க, சிவகுமாரும், அவரது சகோதரர் சுரேஷும் டில்லியில் முகாமிட்டனர். 2028 பார்முலா சி வகுமாரின் முயற்சியை முறியடிக்க, சித்துவின் ஆதரவாளர்கள், '2028 பார்முலா' என்ற திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளனர். அதாவது, தன் ஐந்து ஆண்டு கால முதல்வர் பதவியை சித்தராமையா நிறைவு செய்ய வேண்டும். அப்படி செய்தால், 2028 சட்டசபை தேர்தலின்போது, கட்சியின் அதிகாரப்பூர்வ முதல்வர் வேட்பாளராக சிவகுமாரை முன்னிறுத்தி, அவருக்கு ஆதரவாக சித்தராமையா தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார். இதன் மூலம், கட்சியில் நல்லிணக்கம், சமநிலையை உறுதிப்படுத்த, இந்த உத்தி வகுத்துள் ளதாக கூறுகின்றனர். இந்த பார்முலாவை சிவகுமார் நிச்சயமாக ஏற்கமாட்டார். ஏனெனில், கடந்த முறை சித்தராமையா ஆட்சியின்போது, சட்டசபை தேர்தலுக்கு முன், வீர சைவ லிங்காயத்தை தனி மதமாக அறிவிக்க, மத்திய அரசுக்கு முதல்வர் சித்தராமையா பரிந்துரைத்தார். இது, வீரசைவ லிங்காயத் சமுதாய மக்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில், மெஜாரிட்டி பெறும் வாய்ப்பை இழந்து, ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வாய்ப்பில்லை இன்னும் இரண்டரை ஆண்டுகள் பதவியை, சித்தராமையாவே அனுபவித்தால், மாநிலத்தில், கட்சியில் உள்ள தன் செல்வாக்கு குறைந்துவிடும் என, சிவகுமார் அச்சப்படுகிறார். எக்காரணத்தை கொண்டும் செய்த ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்று கட்சி மேலிடத்துக்கு தீர்க்கமாக கூறி உள்ளார். அதேவேளையில், மாநில தலைவர் பதவியை எதிர்பார்க்கும், பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, '2028 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், நான் முதல்வர் வேட்பாளராக இருப்பேன்' என்றும் கூறி வருகிறார். இது சித்தராமையா தரப்பினரையும், சிவகுமார் தரப்பினரையும் எரிச்சலடைய வைத்துள்ளது. கர்நாடக காங்கிரசில் மூன்று அதிகார மையங்கள் உருவாகி உள்ளதால், அவரவர் ஆதரவாளர்கள், தங்களின் 'காட் பாதர்'களுக்கு ஆதரவாக வெளிப்படையாக பேசி வருகின்றனர். இது, 2028 சட்டசபை தேர்தலில் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணரவில்லை. - நமது நிருபர் -