கொப்பால்: “இரண்டாவது விளைச்சலுக்கு, தண்ணீர் திறந்துவிடாவிட்டால், துங்கபத்ரா அணையில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம்,” என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு எச்சரித்தார். கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி: துங்கபத்ரா அணை, துணை முதல்வர் சிவகுமாரின் தாத்தா சொத்து அல்ல. இரண்டாவது விளைச்சலுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்றால், நாங்கள் கைக்கட்டி அமர்ந்திருக்க வேண்டுமா? இம்முறை மிக அதிகமான மழை பெய்து, துங்கபத்ரா அணை நிரம்பியுள்ளது. இரண்டாவது விளைச்சலுக்கு அணையில் இருந்து, தண்ணீர் திறந்து விட வேண்டும். நான்கு மாவட்டங்களின் பா.ஜ., தலைவர்கள், விவசாயிகளின் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்று தெரியவில்லை. எங்களின் பங்கு நீரை இரண்டாவது விளைச்சலுக்கு திறந்து விடக்கோரி, போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மைசூரு பகுதியில், 'எங்கள் நீர், எங்கள் உரிமை' என, காங்கிரசார் போராட்டம் நடத்தினர். அதே போன்று நாங்களும், துங்கபத்ரா அணையில் இருந்து, விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்துவிடும்படி போராட்டம் நடத்துவோம். அணையை முற்றுகையிடுவோம். தண்ணீர் திறக்காவிட்டால், அணையில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம். துங்கபத்ரா அணையின் 19 மதகின் ஷட்டர் உடைந்து, 16 மாதங்கள் ஆகின்றன. ஷட்டர் உடைந்த மறுநாளே, துணை முதல்வர் சிவகுமார், அணையை பார்வையிட்டு, ஷட்டர்களை மாற்றுவதாக உறுதி அளித்தார். ஆனால் இதுவரை ஒரு ஷெட்டரை கூட மாற்றவில்லை. இதுகுறித்து வல்லுநர் அறிக்கை அளித்தும், அரசு பொருட்படுத்தவில்லை. அணையின் நீரை வீணாக்க அரசு முயற்சிக்கிறது. பா.ஜ., அரசு இருந்தபோது, தண்ணீர் திறந்து விட்டோம். அணையில் 70 டி.எம்.சி., தண்ணீர் இருந்தும், தண்ணீர் திறக்க தயங்குவது ஏன்? மாநில அணையின் சூழ்நிலை, விவசாயிகளின் நிலையை தெரிந்து கொள்ள சிவகுமார் முன்வரவில்லை. அணையின் ஷெட்டர்களை மாற்ற 52 கோடி ரூபாய் வேண்டும். இந்த தொகையை கொடுக்க முடியாதபடி, அரசுக்கு ஏழ்மை வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.