18 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் தண்டனை அல்ல: சபாநாயகர்
மங்களூரு: ''பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை நான் சஸ்பெண்ட் செய்ததை, அவர்களுக்கு கொடுத்த தண்டனையாக பார்க்க வேண்டாம்,'' என்று, சபாநாயகர் காதர் கூறினார்.மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:முன்னாள் டி.ஜி.பி., ஓம்பிரகாஷ் கொலையில், பி.எப்.ஐ.,க்கு தொடர்பு இருப்பதாகவும், இதுபற்றி முதல்வர், உள்துறை அமைச்சர், சபாநாயகரிடம் விசாரிக்க வேண்டும் என்றும், முன்னாள் டி.எஸ்.பி., அனுபமா செனாய் கூறியது பற்றி, ஊடகங்கள் வழியாக தெரிந்து கொண்டேன். நிறைய அனுபவம்
அவரிடம் ஏதாவது ஆவணம் இருந்தால், விசாரணை அதிகாரிகளிடம் கொடுக்கட்டும். அரசியல்வாதிகளை விட, போலீஸ் அதிகாரிகளுக்கு நிறைய அனுபவம் இருக்கும்.நான் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது, என்னுடன் நிறைய பேர் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர். இவர்களில் யாராவது தவறு செய்தால், சபாநாயகர் ஆதரவாளர் என்று கூறி விடுகின்றனர். புகைப்படம் எடுக்க வருபவர்களை தடுத்தால், அரசியல்வாதிகளுக்கு தலைக்கனம் அதிகம் என்று பேசுகின்றனர். எங்கள் நிலையை அனைவரும் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.பஹல்காமில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்று, முதல்வர் சித்தராமையா கூறி இருப்பது பற்றி, சபாநாயகராக என்னால் கருத்து சொல்ல முடியாது. போர் வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு எடுக்க வேண்டியது, மத்திய அரசு தான்.சட்டசபையில் அரசியலமைப்பு விதிகளை மீறி நடந்ததால், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை 'சஸ்பெண்ட்' செய்தேன். இதை அவர்களுக்கு கொடுத்த தண்டனையாக பார்க்க வேண்டாம். அவர்களின் நடவடிக்கையை மாற்றி கொள்ளும் வழியாக பார்க்க வேண்டும். மக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெறுவதால் மட்டும் எம்.எல்.ஏ., ஆகிவிட முடியாது. அரசியலமைப்பு சட்டப்படி பதவி பிரமாணம் எடுத்தால் தான், எம்.எல்.ஏ., ஆக முடியும். விமர்சனம்
சபாநாயகர் பீடத்தை அவமதிப்பது தவறு. சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறும்படி, எதிர்க்கட்சி தலைவர் அசோக் என்னிடம் கேட்டு கொண்டார். ஆலோசித்து முடிவு செய்வேன். பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா என்னை மதரீதியாக விமர்சித்து உள்ளார்.இதுதொடர்பான வீடியோ ஆதாரம், பத்திரிகைகளில் வந்த செய்திகள் அடிப்படையில் அவர் மீது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை உரிமை குழுவிடம் புகார் செய்து உள்ளனர். அதுபற்றி விசாரணை நடக்கிறது. எம்.எல்.ஏ.,க்கள் சிலர் ஏதாவது பேசி, பிரபலம் ஆக வேண்டும் என்று நினைக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.