உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஜோதிடரை நம்பி ரூ.1 கோடியுடன் 180 கிராம் நகையை இழந்த ஆசிரியை

 ஜோதிடரை நம்பி ரூ.1 கோடியுடன் 180 கிராம் நகையை இழந்த ஆசிரியை

பசவேஸ்வர நகர்: லட்சுமி கோவில் கட்டினால், நல்லது நடக்கும் என்ற ஜோதிடரின் வார்த்தையை நம்பி ஒரு ஆசிரியை, ஒரு கோடி ரூபாய் ரொக்கம், 180 கிராம் தங்கத்தை பறிகொடுத்தார். பெங்களூரின் பசவேஸ்வர நகரில் வசிப்பவர் சர்வமங்களா. 50. இவர் சங்கீத ஆசிரியை. இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன், ஜோதிடர் மஞ்சுநாத் அறிமுகமானார். சர்வமங்களாவின் குடும்பத்தினருக்கும் நெருக்கமாக இருந்தார். சர்வமங்களாவிடம் உள்ள பணம், தங்கநகைகள் உட்பட அனைத்து தகவல்களும் ஜோதிடருக்கு தெரிந்தது. இவரை ஏமாற்றி பணம் பறிக்க திட்டம் தீட்டினார். சர்வமங்களாவின் வீட்டுக்கு 2022 நவம்பரில் வந்த போது, இவரது ஜாதகத்தை பார்த்த ஜோதிடர், 'உங்களின் ஜாதகப்படி நீங்கள் லட்சுமி தேவிக்கு கோவில் கட்ட வேண்டும்; அது உங்களுக்கு நல்லது' என கூறினார். ஜோதிடம், ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை இருந்ததால், அவரது பேச்சை சர்வ மங்களா நம்பினார். சில நாட்களுக்கு பின், மீண்டும் வந்த ஜோதிடர், உடுப்பி மாவட்டத்தின், காபு என்ற இடத்தில் நான் லட்சுமி கோவில் கட்ட திட்டமிட்டுள்ளேன். நீங்கள் பண உதவி செய்தால், கோவில் திருப்பணி முடிந்த பின், பணத்தை திருப்பி தருகிறேன் என்றார். வங்கியில் கடன் பெற்று பணத்தை தருவதாக கூறி, தன் கூட்டாளிகளை வங்கி அதிகாரிகளை போன்று, சர்வ மங்களாவின் வீட்டுக்கு அழைத்து வந்து, அறிமுகம் செய்தார். இதை நம்பிய ஆசிரியை சர்வமங்களா, முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாய் கொடுத்தார். அதன்பின் 2023ல் 4.6 லட்சம் ரூபாய் கொடுத்தார். கோவில் திருப்பணிக்கு பணம் போதவில்லை என, ஜோதிடர் கூறியதால் தன் சொத்துகளை விற்று கிடைத்த பணத்தில், 30 லட்சம் ரூபாய் கொடுத்தார். இது போன்று படிப்படியாக ஒரு கோடி ரூபாய் கொடுத்தார். கோவில் எப்படி கட்டப்படுகிறது என, சர்வமங்களா கேட்ட போது, அவரை நம்ப வைக்க அவ்வப்போது வீடியோ கால் செய்து, ஏதோ ஒரு இடத்தில் கட்டப்படும் கோவிலை காண்பித்து ஜோதிடர் ஏமாற்றினார். கோவில் பணிகளை பார்க்க, ஆசிரியை ஒரு முறை காபுவுக்கு சென்ற போது, அவரது போனை எடுக்காமல் ஜோதிடர் நழுவினார். இதனால் கோவிலை பார்க்க முடியாமல் ஆசிரியை திரும்பி விட்டார். ஒரு கோடி ரூபாய் வரை பறித்தும், பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது; கோபுரம் கட்ட பணம் இல்லை என ஜோதிடர் கூறினார். ஆசிரியை தன் தங்க செயின், கம்மல்கள் உட்பட 180 கிராம் எடையுள்ள தங்க நகைகளையும் கொடுத்தார். அதன்பின் ஜோதிடரை தொடர்பு கொள்ள முடியவில்லை; தலைமறைவானார். கோவில் பெயரில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியை சர்வமங்களா, ஜோதிடரை தேட துவங்கினார். சமீபத்தில் ராமேஸ்வரத்தில் ஆசிரியையிடம் சிக்கி கொண்டார். பணத்தையும்,நகைகளையும் திருப்பி தரும்படி கேட்ட போது, ஒரு மாதத்தில் திருப்பி தருவதாக உறுதி அளித்தார். ஆனால் தரவில்லை. எனவே ஜோதிடர், அவரது கூட்டாளிகள் மீது, பசவேஸ்வர நகர் போலீஸ் நிலையத்தில், ஆசிரியை நேற்று முன் தினம் புகார் அளித்துள்ளார். போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை