உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அசைக்க முடியாத எதிரி பசவராஜ் ஹொரட்டி

 அசைக்க முடியாத எதிரி பசவராஜ் ஹொரட்டி

ஹூப்பள்ளி: ''மேல்சபை தலைவர் பதவியில் காங்கிரஸ் அமர்வதற்கு ஒரு உறுப்பினர் குறைவாக உள்ளார். அடுத்த மேல்சபை தேர்தலுக்கு பின், காங்கிரஸ் பெரும்பான்மை பெறும். அதுவரை பசவராஜ் ஹொரட்டி தலைவராக தொடருவார்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகாவின் மேற்கு ஆசிரியர் தொகுதியில் தொடர்ந்து எட்டு முறை எம்.எல்.சி.,யாக தேர்வாகி, சாதனை படைத்த பசவராஜ் ஹொரட்டிக்கு, ஹூப்பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அவரை கவுரவித்து, முதல்வர் சித்தராமையா பேசியதாவது: பசவராஜ் ஹொரட்டி, வெளிப்படையான அரசியல்வாதி. 1980ல் அவர் அரசியலில் நுழைந்தார். 1983ல் நான் எம்.எல்.ஏ.,வாக விதான் சவுதாவினுள் நுழைந்தேன். 40 ஆண்டுகளாக இருவரும் நண்பர்களாக உள்ளோம்; அது தொடரும். மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, அசைக்க முடியாத எதிரி. அவர், அனைத்து கட்சியினருடனும் நட்புடன் பழகி வருகிறார். அதிகாரத்தின் மீது பேராசை இல்லாதவர்; அடக்கமானவர். மேற்கு ஆசிரியர் தொகுதியில் அவர் செய்த பணிகளால் தொடர்ந்து எட்டு முறை வெற்றி பெற்றுள்ளார். நாங்கள் இருவரும் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள். ஐக்கிய ஜனதா தளமும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைய, தேவகவுடா விரும்பவில்லை. அடுத்த தேர்தலிலும் அவர் போட்டியிடுவார். ஏற்கனவே சாதனை படைத்துள்ள அவரை, யாராலும் தோற்கடிக்க முடியாது. கடந்த முறை அவரை தோற்கடிக்க, என் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தேன். அரசியல் வேறு; நட்பு வேறு. அனைத்து கட்சியினரையும் மரியாதையுடனும், சட்டப்படியும் வழிநடத்துகிறார். சிறந்த ஆளுமையை வளர்த்து கொண்டுள்ளார். சபையில் யாருக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பது அவருக்கு தெளிவாக தெரியும். மேல்சபையில் பெரும்பான்மை பெற, காங்கிரசிற்கு ஒரு உறுப்பினர் குறைவாக உள்ளார். அடுத்த தேர்தலுக்கு பின், மேல்சபையில் காங்கிரஸ் பெரும்பான்மை பெறும். அதுவரை அவர், தலைவராக தொடர்வார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். கர்நாடக மேல்சபையில் காங்கிரஸ் 37, பா.ஜ., 29, ம.ஜ.த., 7, சுயேச்சை 1, தலைவர் 1 என மொத்தம் 75 இடங்கள் உள்ளன. தொடர்ந்து எட்டு முறை எம்.எல்.சி.,யாக தேர்வாகி சாதனை படைத்த மேல்சபை பசவராஜ் ஹொரட்டியை, முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை