உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கர்நாடக மாநில தி.மு.க., கூண்டோடு கலைப்பு; பதவி எதிர்பார்த்தவர்கள் பெரும் ஏமாற்றம்

 கர்நாடக மாநில தி.மு.க., கூண்டோடு கலைப்பு; பதவி எதிர்பார்த்தவர்கள் பெரும் ஏமாற்றம்

கர்நாடகாவில் 2011 முதல் 2025 வரை, 15 ஆண்டுகள் அமைப்பாளராக இருந்த ந.ராமசாமி தலைமையிலான கர்நாடக தி.மு.க., நிர்வாகத்தை அக்கட்சி தலைமை கலைத்துள்ளது; புதிய பொறுப்புக் குழுவை நியமித்துள்ளது. அரசியல் வரலாற்றில் 1917 முதல் 1944 வரையில் நீதிக்கட்சியாகவும், 1944 முதல் 1949 வரை தி.க.,வாகவும், 1949 செப்டம்பர் 15 முதல் தி.மு.க.,வாகவும் கர்நாடக மண்ணில் தமிழர்களுக்காக இயக்கத்தினர் குரல் கொடுத்து வருகின்றனர். இம்மாநிலத்தில் தி.மு.க.,வை வளர்த்தெடுக்க அண்ணாதுரை, நெடுஞ்செழியன், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் என, அனைத்து தலைவர்களும் உரை நிகழ்த்தியுள்ளனர். தி.மு.க., - எம்.எல்.ஏ., பெங்களூரு பாரதிநகர் தொகுதியில் திராவிடமணி என்ற பூசலிங்கம் ஒருமுறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். பெங்களூரு மாநகராட்சியிலும், தங்கவயலிலும் தி.மு.க.,வினர் கவுன்சிலர்களாக பொறுப்பில் இருந்துள்ளனர். முன்பு தி.மு.க.,வில் ஓட்டெடுப்பின் மூலம் நிர்வாகிகளை தேர்வு செய்து வருவது வழக்கமாக இருந்தது. அதன்படி தான், கர்நாடக தி.மு.க.,வின் அமைப்பாளர்களாக எஸ்.வி.பதி, எஸ்.என்.நாராயணன், திராவிடமணி, சோழன், வி.டி.சண்முகம், கிள்ளிவளவன், ந.ராமசாமி ஆகியோர் பதவியில் இருந்தனர். தி.மு.க.,வில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாக தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கர்நாடகாவில் 2011க்கு பின் தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது வரையிலும் ந.ராமசாமியே அமைப்பாளராக இருந்து வந்தார். இந்த கால கட்டத்தில் உட்கட்சியில் குழப்பங்கள் தலை துாக்கிய வண்ணம் இருந்தது. பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. கர்நாடக மாநில தி.மு.க., என்றாலே கோஷ்டி மோதல் தான் என்ற அதிருப்தி, கட்சி தலைமையில் தலைவலியை ஏற்படுத்தியது. நிதி முறைகேடு மாநில தி.மு.க.,வுக்கு பெங்களூரு ராமசந்திரபுரத்தில் சொந்தமான கட்டடம் உள்ளது. அதில் உள்ள கடைகள் மூலம் வாடகையும் வந்து கொண்டிருந்தது. இந்த கட்டடத்தின் கடைகளுக்கான டிபாசிட் தொகை, மாதாந்திர வாடகை தொகையில் முறைகேடு நடப்பதாக கட்சி தலைமையில் புகார் கொடுக்கப்பட்டது. இதை தீவிரமாக கருதிய தலைமை, செப்டம்பரில், மாநில தி.மு.க.,வினரை அழைத்து தனித் தனியாக விசாரித்தது. இதன் மூலம் விரைவில் மாற்றம் வரும் என்பது உணர்த்தப்பட்டது. இந்நிலையில், 15 ஆண்டுகளாக பதவியில் இருந்த மாநில அமைப்பாளர் ந.ராமசாமி தலைமையிலான நிர்வாகம் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை அவைத் தலைவராக இருந்து வந்த எம்.பெரியசாமி தலைமையில் புதிய பொறுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களாக ந.ராமசாமி, கே.தட்சிணாமூர்த்தி, ஏ.டி.ஆனந்தராஜ், அன்பழகன், மு.கருணாநிதி, சற்குணம், முருகமணி, 'போர்முரசு' கதிரவன் ஆகிய எட்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன், நேற்று முன் தினம் வெளியான கட்சிப்பத்திரிகையான 'முரசொலி'யில் அறிவித்துள்ளார். இதை பார்த்த கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் பல முறை முகாமிட்டிருந்த பலருக்கு பதவி கிடைக்கவில்லை.

தங்கவயல் புறக்கணிப்பு

புதிய பொறுப்பு குழுவில், தங்கவயலை சேர்ந்த யாருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை. பெங்களூரில் கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மீது கட்சிக்கொடி பறப்பது அபூர்வம். ஆனால், தங்கவயலில் உள்ள 21 வார்டுகளில் கம்பங்கள் நிறுவி, கட்சிக்கொடி பறக்க விட்டுள்ளனர். தி.மு.க.,வினர் வீட்டின் மீதும் கொடிகள் பறப்பதை காணலாம். தலைமை அறிவிக்கும் அனைத்து போராட்டங்களும் நடத்தப்பட்டன. சிறைவாசம் அனுபவித்தவர்கள் உள்ளனர். தி.மு.க., தலைவர்களின் பிறந்த நாள், நினைவுநாள் அனுஷ்டிப்பும் நடத்துவது வழக்கம். பெங்களூரு நகரை சேர்ந்தவர்களை விட, இவர்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்று எப்போதும் பெருமை பேசுபவர்களும் தங்கவயலில் உள்ளனர். இதற்கு முன்பு 1975 முதல் 2011 வரை கிள்ளிவளவன் தலைமையில் பொறுப்புக் குழு அமைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது முறையாக அமைக்கப்பட்டிருந்த பொறுப்புக் குழுவில் தங்கவயலை சேர்ந்த தி.மு.க.,வினர் யாரும் இடம் பெறவில்லை. இதனால் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இவர்களை சமாதானப்படுத்த போவதாக தங்கவயல் நகர தி.மு.க.,வின் மூத்த பிரமுகர் தெரிவித்தார். தங்கவயல் போன்று மைசூரு ஷிவமொக்கா, பத்ராவதி ஆகிய நகரங்களிலும் தி.மு.க., உள்ளதாக பெருமை பேசினாலும் பிரதிநிதித்துவம் மட்டும் வழங்கப்படவில்லை. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை