உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் பெண் இன்ஜினியரை மிரட்டி... ரூ.32 கோடி அபேஸ்! : 6 மாதங்களாக படிப்படியாக அபகரித்த கும்பல் மீது புகார்

டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் பெண் இன்ஜினியரை மிரட்டி... ரூ.32 கோடி அபேஸ்! : 6 மாதங்களாக படிப்படியாக அபகரித்த கும்பல் மீது புகார்

கர்நாடகாவில் பல்வேறு இடங்களில், டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் மோசடி செய்து, பணம் பறிப்பது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த போலீசார் அதிகபட்ச முயற்சிகள் செய்தும் பலன் இல்லை. கோடிக்கணக்கான ரூபாயை இழக்கும் சம்பவங்கள், பெங்களூரில் வெளிச்சத்துக்கு வருகின்றன. பெங்களூரின், இந்திரா நகரில் 57 வயதான ஒரு பெண், தன் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில், 'சாப்ட்வேர்' இன்ஜினியராக பணியாற்றுகிறார். கடந்த 2024 செப்டம்பர் 15ம் தேதி, இவருக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து போன் வந்தது. கூரியர் பிரதிநிதி அதில் பேசியவர் தன்னை மும்பை, அந்தேரியில் உள்ள டி.ஹெச்.எல்., கூரியர் நிறுவன பிரதிநிதி என, அறிமுகம் செய்து கொண்டார். அதன்பின், 'உங்கள் பெயருக்கு மூன்று கிரெடிட் கார்டுகள், நான்கு பாஸ்போர்ட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., போதைப்பொருள் அடங்கிய பார்சல் வந்துள்ளது' என்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இன்ஜினியர், 'நான் பெங்களூரில் வசிக்கிறேன். மும்பைக்கு வந்துள்ள பார்சலுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என கூறினார். அதை ஒப்புக்கொள்ளாத நபர், 'பார்சலுடன், உங்கள் மொபைல் எண் லிங்க் ஆகியுள்ளது. இது சைபர் குற்றமாகும்' என, மிரட்டினார். பெண் பதிலளிப்பதற்கு முன்பே, அந்நபர், 'சி.பி.ஐ., அதிகாரி இங்கிருக்கிறார். அவரிடம் பேசுங்கள்' என்றார். அதன்பின் சி.பி.ஐ., அதிகாரி போன்று பேசிய வேறொரு நபர், அப்பெண்ணின் வங்கி கணக்கு, பண பரிவர்த்தனை உட்பட, தனிப்பட்ட தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டார். 'உங்களின் ஆவணங்களை சைபர் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்துகின்றனர். உங்களை அவர்கள் கண்காணிக்கின்றனர். இதை பற்றி நீங்கள் போலீசாரிடம் புகார் அளிக்க கூடாது. யாரிடமும் சொல்லவும் கூடாது. சட்ட உதவிக்காக யாரையும் நாடவும் கூடாது. ஒருவேளை நீங்கள் சொன்னால், உங்கள் குடும்பத்தினரையும் வழக்கில் சிக்க வைப்போம்' என மிரட்டினர். ஒர்க் பிரம் ஹோம் இதனால் கலக்கமடைந்த பெண் இன்ஜினியர், நடந்த விஷயத்தை தன் குடும்பத்தினரிடம் கூறாமல், மவுனமாக இருந்தார். இந்த நேரத்தில் அவர், 'ஒர்க் பிரம் ஹோமில்' இருந்தார். சில நாட்களுக்கு பின், சி.பி.ஐ., அதிகாரி பிரதீப் சிங் எனக் கூறி, பெண் இன்ஜினியரை தொடர்பு கொண்ட நபர், 'உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருக்கிறோம். உங்களின் சொத்துகள், பணம் குறித்து தகவல் தெரிவியுங்கள்' என்றார். சி.பி.ஐ., அதிகாரி தன்னிடம் பேசுவது, உண்மையான சி.பி.ஐ., அதிகாரி என, நம்பி அப்பெண் அனைத்து விபரங்களையும் கூறினார். 2024 செப்டம்பர் 23ல், ஆர்.பி.ஐ., அதிகாரி போன்று அப்பெண்ணிடம் பேசிய நபர், 'உங்கள் கணக்கில் உள்ள பணத்தை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு, பணத்தை பரிமாற்றம் செய்யுங்கள். விசாரணை முடிந்து நீங்கள் தவறு செய்யவில்லை என்பது உறுதியானால், பணத்தை மீண்டும் உங்கள் கணக்குக்கு மாற்றுவோம்' என கூறினார். அதன்பின் அப்பெண்ணும், தனது பிக்சட் டிபாசிட்களை தவிர, சேமிப்பில் இருந்த 31.83 கோடி ரூபாயை படிப்படியாக, அந்நபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு மாற்றினார். 2025 பிப்ரவரிக்குள் பணம் திரும்ப கிடைக்கும் என, நம்ப வைத்தனர். ஆனால் பிப்ரவரி தாண்டியும் பணத்தை திருப்பித்தரவிலை. இது குறித்து கேட்ட போது, ஏதேதோ கூறி மழுப்பினர். தன் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாலும், பயம் காரணமாகவும் அவர், போலீசாரிடம் புகார் அளிக்க தயங்கினார். சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., அதிகாரிகள் பெயரில் பேசிய நபர்கள், 'உங்களை டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து விடுவித்துள்ளோம்' என, சமீபத்தில் கூறினர். அப்பெண்ணுக்கு, 'கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட்'டும் அனுப்பினர். ஆனால் பணம் திரும்ப வரவில்லை. அந்நபர்களும் தொடர்பை துண்டித்து கொண்டனர். மோசடி அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தும், பலன் இல்லை. இது மோசடி என்பதை புரிந்து கொண்ட அப்பெண், இம்மாதம் 14ம் தேதி, பெங்களூரு கிழக்கு சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கியுள்ளனர். உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநிலத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில், பணம் கொள்ளையடிப்பது அதிகரிக்கிறது. படித்தவர்களே இத்தகைய மோசடிக்கு பலியாகின்றனர். இப்போது சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் ஒருவர், சைபர் குற்றவாளிகளிடம் 31.83 கோடி ரூபாயை இழந்துள்ளார். தொடர்ந்து ஆறு மாதம் டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில், படிப்படியாக 187 வங்கி கணக்குகளுக்கு, பணம் பரிமாற்றம் செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களால், புகார் அளிக்க தாமதித்துள்ளார். இம்மாதம் 14ம் தேதிதான் புகார் அளித்துள்ளார். நாங்களும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணை நடத்துகிறோம். கர்நாடகாவில் டிஜிடல் அரெஸ்ட் வலையில் சிக்கி, பறிகொடுத்த மிக அதிகமான தொகை இதுதான். சைபர் குற்றவாளிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். வங்கி அதிகாரிகள் உட்பட எந்த அதிகாரிகளின் பெயரில் போன் வந்தாலும், உடனடியாக போலீசாரை தொடர்பு கொள்ளுங்கள். அறிமுகமில்லாத எண்களில் இருந்து, அழைப்பு வந்தால் பொருட்படுத்தாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை