காதலிக்காக திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
வர்த்துார்: காதலிக்காக திருடிய நேபாள வாலிபர், அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு குஞ்சூர், பெல்லந்துாரில் உள்ள இரண்டு மொபைல் கடைகளின் கதவை உடைத்த மர்ம நபர்கள், விலை உயர்ந்த ஐபோன்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து வர்த்துார், பெல்லந்துார் போலீஸ் நிலையங்களில் வழக்குப் பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், மொபைல் கடைகளில் ஐபோன்கள் திருடியதாக, நேபாளத்தின் திவாஸ் காமி, 23, ஆரோஹன் தாபா ஆகியோரை வர்த்துார் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். திருடிய மொபைல் போன்களை விற்றதாக, திவாஸ் காமியின் காதலி அஸ்மிதா, 22, என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 17 ஐபோன்கள் மீட்கப்பட்டன. அஸ்மிதாவும் நேபாளத்தை சேர்ந்தவர். கணவரை பிரிந்த அவர், திவாஸ் காமியை காதலித்தார். இரண்டு ஆண்டுகளாக, வர்த்துாரில் உள்ள வாடகை வீட்டில், திவாஸ் காமியும், அஸ்மிதாவும் திருமணம் செய்யாமல் இருவரும் 'லிவிங் டு கெதர்' உறவில் இருந்தனர். 'ஆன்லைன்' நிறுவனத்தில் 'டெலிவரி பாயா'க வேலை செய்த திவாஸ் காமி, நண்பர் ஆரோஹன் தாபாவுடன் சேர்ந்து மொபைல் கடைகளில் திருடுவதை தொழிலாக வைத்திருந்தார். திருடிய மொபைல் போன்களை, அஸ்மிதா மூலம் விற்று, அதில் கிடைக்கும் பணத்தை மூன்று பேரும் ஆடம்பரமாக செலவு செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டினர் என்பது பற்றி விசாரணை நடக்கிறது.