உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.10,000 கோடி ஜி.எஸ்.டி., பாக்கி: 10 விமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

ரூ.10,000 கோடி ஜி.எஸ்.டி., பாக்கி: 10 விமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

புதுடில்லி:இந்தியாவில் விமான சேவைகளை வழங்கி வரும் 'பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுாப்தான்ஸா, எமிரேட்ஸ்' உள்ளிட்ட பத்து வெளிநாட்டு நிறுவனங்கள், மொத்தம் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு, ஜி.எஸ்.டி., செலுத்தவில்லை என, மத்திய ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த பத்து விமான சேவை நிறுவனங்கள், அவற்றின் தலைமை அலுவலகங்களில் இருந்து, இந்திய கிளை அலுவலகங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சேவைகளுக்கு ஜி.எஸ்.டி., செலுத்தாமல், நிலுவை வைத்திருப்பதாக, கடந்த மூன்று நாட்களாக தனித்தனியே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இது கடந்த 2017 முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கான நிலுவைத் தொகையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூன் 26ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, தொடர்புடைய நபரிடம் இருந்து இறக்குமதி சேவையைப் பெறுபவர், முழு உள்ளீட்டு வரி பயனுக்கான கிரெடிட் பெற தகுதியுடையவர் என்பது, விமான சேவை நிறுவனங்களுக்கு பொருந்தாது. விமான சேவை நிறுவனங்கள், விலக்கு மற்றும் விலக்கு அளிக்கப்படாத பிரிவுகள் என இரண்டு பிரிவுகளில் சேவைகளை வழங்குவதால், மேற்கண்ட சுற்றறிக்கையின் கீழ், அவை சலுகை பெறத் தகுதியற்றவை.விலக்கு அளிக்கப்பட்ட சேவை, விலக்கு அளிக்கப்படாத சேவைகள் குறித்த தனிப்பட்டியலை அளிக்குமாறு, ஏற்கனவே விமான சேவை நிறுவனங்களிடம் விபரம் கேட்கப்பட்டன. ஆனால், பத்தில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே, இந்த பட்டியலை அளித்துள்ளன.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

இன்போசிஸ் விவகாரத்தில் தளர்வுக்கு இடமில்லை

கடந்த வாரம் 'இன்போசிஸ்' நிறுவனத்துக்கு 32,000 கோடி ரூபாய் அளவில்ஜி.எஸ்.டி., வரி நிலுவை இருப்பதாக, ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இன்போசிஸ் தரப்பில், அனைத்து ஜி.எஸ்.டி., தொகையையும் செலுத்தி விட்டதாகவும்; கர்நாடக மாநில ஜி.எஸ்.டி அதிகாரிகள், நோட்டீஸை திரும்பப் பெற்று விட்டதாகவும் பங்குச் சந்தைக்கு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்போசிஸ் பத்து நாட்கள் அவகாசம் கோரியுள்ளதாகவும்; ஜி.எஸ்.டி., விவகாரத்தில், மத்திய அரசு எந்த தளர்வும் அளிக்கப் போவதில்லை எனவும், மத்திய அரசின் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

'உலகில் வேறெங்கும் இல்லாதது'

ஜி.எஸ்.டி., நோட்டீஸ் குறித்து, ஐ.ஏ.டி.ஏ., எனப்படும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'அரசு உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இது வலுவான இந்திய விமான போக்குவரத்தின் வேகத்தை குறைத்துவிடும் ஆபத்தில் தள்ளிவிடலாம். உலகத்தில் வேறு எங்கும் இதுபோன்ற நடைமுறை இல்லை' என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி