| ADDED : ஜூன் 25, 2024 10:28 PM
புதுடில்லி : ரிசர்வ் வங்கி, சோதனை முறையில் அறிமுகப்படுத்திய, 'இ--ருபி'யின் பயன்பாடு, அதன் ஆரம்பகட்ட இலக்கை அடைந்த நிலையில், தற்போது சரியத் துவங்கியுள்ளது. இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: பணத்தின் புழக்கத்தை குறைக்கும் நோக்கில், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம், ரிசர்வ் வங்கி சோதனை முறையில், இ-ருபியை அறிமுகப்படுத்தியது. இதன் வாயிலாக நாள் ஒன்றுக்கு, 10 லட்சம் பணப் பரிமாற்றங்கள் நடைபெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த இலக்கு, கடந்தாண்டு டிசம்பர் மாதம் எட்டப்பட்டது.இதனை பயன்படுத்தும் சில்லரை வர்த்தகர்களுக்கு, வங்கிகள் ஊக்கத்தொகை வழங்கியதாலும்; வங்கிப் பணியாளர்களுக்கான ஊதியம் இதன் வாயிலாக வழங்கப்பட்டதாலுமே இந்த இலக்கு எட்டப்பட்டது. இந்நிலையில், இ-ருபியின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டன.இதையடுத்து, இதன் பயன்பாடு, தற்போது நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பரிமாற்றங்களாக குறைந்துள்ளது. இ-ருபிக்கான யதார்த்த தேவை இல்லாததையே இது வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைக்கு இந்த சோதனை திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கம் ரிசர்வ் வங்கிக்கு இல்லை. இத்திட்டத்தின் பயன்பாடு குறித்து அறியவும், புதிய பயன்பாடுகளை உருவாக்குவதிலுமே கவனம் செலுத்தி வருகிறது.அவ்வாறு உருவாக்கப்படும்பட்சத்தில், இ- ருபியின் பயன்பாடும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். உலகளவில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள், பணப்புழக்கத்தை குறைக்கும் நோக்கில், சோதனை முறையில் டிஜிட்டல் நாணயங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பெரும்பாலும், அனைத்து நாடுகளிலுமே இதன் பயன்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இவ்வாறு தெரிவித்தனர்.