| ADDED : ஜூன் 07, 2024 02:44 AM
புதுடில்லி: சென்னையைச் சேர்ந்த 'பின்னி' நிறுவனத்தின் தலைவர் நந்தகோபால், தன் இரண்டாவது மகன் அரவிந்த் நந்தகோபால், நிறுவனம் உட்பட தன் சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.பின்னி நிறுவனம் ஜவுளி பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் நந்தகோபால், வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணங்களை கருத்தில் கொண்டு, தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சமீபத்தில் கடிதம் அளித்திருந்தார். கடந்த 1ம் தேதி, நிறுவனத்தின் இயக்குனர் குழு இதற்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக எந்த ஒரு கடிதத்திலும் கையெழுத்து போட்ட நினைவு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அரவிந்தும் மற்றவர்களும் இணைந்து, தன்னிடமிருந்து நிறுவனத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டி, பங்குச் சந்தைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அரவிந்த் மறுத்துள்ளார். இந்நிலையில் பின்னி நிறுவனம், பங்குச் சந்தை பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.