உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சில்லரை முதலீட்டாளர்களுக்கு எளிதாகும் பத்திர முதலீடு

சில்லரை முதலீட்டாளர்களுக்கு எளிதாகும் பத்திர முதலீடு

கடன் பத்திரங்களின் முகமதிப்பு குறைக்கப்பட்டிருப்பது, சில்லரை முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்பாக அமைவதாக கருதப்படுகிறது.முதலீடு செய்யும் போது பரவலாக்கத்தை மனதில் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இப்போது சில்லரை முதலீட்டாளர்களுக்கு வர்த்தக கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது எளிதாகி இருக்கிறது. இதனால், சில்லரை முதலீட்டாளர்கள் வழக்கமான முதலீடு வாய்ப்புகளோடு, பத்திரங்கள் முதலீட்டையும் பரிசீலிக்கலாம் என வல்லுனர்கள் கருதுகின்றனர். வட்டி விகித போக்கில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், பத்திரங்கள் முதலீடு நல்ல வாய்ப்பாக அமையலாம் என்றும் கருதப்படுகிறது.

கடன் பத்திரங்கள்

பல வகையான முதலீடுகள் இருந்தாலும், அவை பொதுவாக கடன் சார் முதலீடுகள், சமபங்கு முதலீடுகள் என இரு பிரிவாக கருதப்படுகின்றன. இவற்றின் கீழ் வரும் ஒவ்வொரு முதலீடும், அதற்கான பலன்களையும், இடர் தன்மையையும் கொண்டுள்ளன. கடன்சார் முதலீடுகளில் வர்த்தக பத்திரங்கள் முதலீடு பிரபலமாக இருந்தாலும், இது பெரும்பாலும் நிறுவன, பெரிய முதலீட்டாளர்களால் அதிகம் நாடப்படுவதாக இருக்கிறது. என்.சி.டி., என சொல்லப்படும் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் போன்றவை இந்த பிரிவில் வருகின்றன. இவை வர்த்தக நிறுவனங்களால் வெளியிடப்படுகின்றன. கடன் பத்திரங்களுக்கு முதிர்வு காலம் வரை குறிப்பிட்ட வட்டி வழங்கப்படுகிறது.எனினும், இவற்றின் முகமதிப்பு 1 லட்சம் ரூபாயாக இருப்பதால், நிறுவன முதலீட்டாளர்களே இதில் அதிகம் முதலீடு செய்யும் நிலை உள்ளது. பெரிய அளவிலான தொகை இருந்தால் மட்டுமே இதில் முதலீடு செய்ய முடியும். இந்நிலையில் அண்மையில், பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபி, வர்த்தக கடன் பத்திரங்களின் முகமதிப்பை 10,000 ரூபாயாக குறைக்க வழி செய்யும் மாற்றத்தை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இனி சில்லரை முதலீட்டாளர்களுக்கும் கடன் பத்திர முதலீடு எளிதாக சாத்தியமாகும் என கருதப்படுகிறது.

புதிய வாய்ப்பு

கடன் பத்திரங்கள் முகமதிப்பு குறைக்கப்பட்டிருப்பது, இந்த பத்திரங்களை மேலும் பரவலாக்குவதோடு, அதிக பத்திரங்கள் வெளியிடப்படும் சாத்தியத்தையும் உண்டாக்கலாம் என வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர். பத்திரங்களின் பரிவர்த்தனையும் அதிகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்லரை முதலீட்டாளர்கள் உள்ளே வருவது, பத்திரங்கள் பணமாக்கல் தன்மையையும் அதிகமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பத்திரங்களை வெளியிடும் நிறுவனங்களுக்கும் பலன் தரும் என்றும் கருதப்படுகிறது. எனவே, செபியின் முடிவு பொதுவாக நிதி உலகின் வரவேற்பை பெற்றுள்ளது. கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது எளிதாகியிருப்பது, சில்லரை முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது. சமபங்கு முதலீட்டை நாடுபவர்கள், அதற்கேற்ப கடன்சார் முதலீடு அம்சங்களில் ஒன்றாக பத்திர முதலீட்டை பரிசீலிக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. இது முதலீடு தொகுப்பு சமநிலைக்கு உதவும். சீரான பலன், குறைவான ஏற்ற இறக்கம் ஆகியவை பத்திரங்களின் சாதக அம்சமாக அமைகின்றன.எனினும், முதலீடு செய்யும் முன் கடன் பத்திரங்களின் தன்மை, வட்டி விகிதம், ஒரு முறை வெளியீடு, பரிவர்த்தனை வாய்ப்பு, இடர் அம்சம், வரி தாக்கம் உள்ளிட்ட அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. வருமான வரியின் தாக்கம், இடர் அம்சம், நிதி இலக்கு ஆகிய அம்சங்கள் அடிப்படையில் முதலீட்டாளர்கள் முடிவு எடுக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை