திருப்பூர்:ஐரோப்பிய நாடுகள், அவை இறக்குமதி செய்யும் ஆடைகளுக்கு தர நிர்ணயச்சான்று பெறுவதை கட்டாயமாக்கியுள்ளன. இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் இதற்கேற்ப தயாராக வேண்டிஉள்ளது.ஐரோப்பிய நாடுகள், 2030ம் ஆண்டுக்குள், வளம் குன்றா வளர்ச்சிநிலை உற்பத்தியை பின்பற்றும் நாடுகளுடன் மட்டுமே வர்த்தக உறவை தொடர திட்டமிட்டுள்ளன. அதற்காக, பருத்தி பயிரிடுவது துவங்கி, ஆடைகளை ஏற்றுமதி செய்வது வரையில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. உலக அளவில் இயங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனங்கள், உற்பத்தி படிநிலைகளை நேரில் ஆய்வு செய்து, சான்றிதழ்கள் வழங்குகின்றன. இவை சான்றிதழ் வழங்கினால் மட்டுமே, ஏற்றுமதி வர்த்தகத்தை தொடர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. புராடெக்ட் பாஸ்போர்ட்
ஆடை உற்பத்தி தொடர்பான அனைத்து தகவல்களும் வாடிக்கையாளருக்கும் சென்றடைய வேண்டும் என, ஐரோப்பா விரும்புகிறது. வாடிக்கையாளர்களும், பசுமை சார் உற்பத்தி ஆடைகள் தானா என்பது குறித்து அறிந்து, அவற்றை பயன்படுத்த விரும்புகின்றனர்.இதையடுத்து, ஒவ்வொரு ஆடைக்கும் டி.டி.பி., எனும் 'டிஜிட்டல் புராடெக்ட் பாஸ்போர்ட்' சான்றிதழ் வழங்குவது கட்டாயமாகி உள்ளது. ஆடை தயாரிக்க பயன்படுத்திய பஞ்சு, செயற்கை நுால், சாயமிடுதல், மொத்தமாக பயன்படுத்திய தண்ணீர் அளவு, வெளியேறிய கார்பன் அளவு, பயன்படுத்திய எரிசக்தி அளவு போன்ற அனைத்து விபரமும் அதில் இடம்பெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இதன் காரணமாக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், இந்த புதிய சட்ட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தயாராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வழிகாட்டும் முயற்சி
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் அங்கமாக இயங்கும், 'ஸ்டார்ட் அப்' தொழில்களுக்கு வழிகாட்டும் 'அடல் இன்குபேஷன்' மையம், திருப்பூர் நிப்ட் - டீ கல்லுாரியுடன் இணைந்து செயல்படுகிறது. அங்குள்ள அனுபவம் வாய்ந்த முன்னாள் டெக்ஸ்டைல் கமிட்டி அதிகாரிகள், இது தொடர்பாக ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.திருப்பூர் 'நிப்ட் - டீ அடல் இன்குபேஷன்' மைய ஆலோசகர் பெரியசாமி கூறியதாவது:ஐரோப்பிய நாடுகள் பஞ்சு கொள்முதல் துவங்கி, பேக்கிங்' வரையிலான உற்பத்தி படிநிலையை விளக்கி, வர்த்தகர்களுக்கு சான்று வேண்டுமென கேட்கின்றனர்.அதற்காக, 'டிஜிட்டல் புராடெக்ட் பாஸ்போர்ட்' என்ற தரச்சான்று வழங்குவது கட்டாயமாகி உள்ளது. இது குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்க, பல்வேறு அமைப்புகளும் களமிறங்கிஉள்ளன.மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் ஆயத்த ஆடை, வீட்டு அலங்கார ஜவுளி பொருட்கள் திறன் கவுன்சில் மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் 'புளூசைன்' நிறுவனத்துடன் இணைந்து, இதற்காக, சிறப்பு ஆன்லைன் கற்றல் முறை துவங்க இருக்கிறது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முக்கிய தொழில் நகரங்களில் கருத்தரங்குகள் நடத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.