உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆவணங்கள் இல்லை என காப்பீடு செட்டில்மென்டை நிராகரிக்க கூடாது

ஆவணங்கள் இல்லை என காப்பீடு செட்டில்மென்டை நிராகரிக்க கூடாது

புதுடில்லி:இனி காப்பீடு நிறுவனங்கள், தேவையான ஆவணங்கள் இல்லை என்ற காரணத்திற்காக, செட்டில்மென்ட் வழங்குவதை நிராகரிக்கக் கூடாது என, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனும் 'இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்' தெரிவித்துள்ளது. காப்பீடு துறையை நுகர்வோரை மையப்படுத்தியதாக மாற்றும் நோக்கில், சமீப காலமாக ஐ.ஆர்.டி.ஏ.ஐ., பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சில பழைய நடைமுறைகளை அகற்றி, புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மற்றொரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தேவையான ஆவணங்கள் இல்லை என்ற காரணத்திற்காக, எந்த ஒரு செட்டில்மென்டும் நிராகரிக்கப்படக் கூடாது. பாலிசி எடுக்கும் போதே தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி வாடிக்கையாளருக்கு தெரிவித்துவிட வேண்டும். மேலும், செட்டில்மென்ட் டிஜிட்டல் முறையில் இல்லாமல், பணமாக மேற்கொள்ளப்படும் நிலையில், தேவைப்படும் ஆவணங்களை மட்டுமே கேட்க வேண்டும்.  பாலிசிதாரர்கள், எப்போது வேண்டுமானாலும் தகவல் தெரிவித்துவிட்டு, பாலிசியை ரத்து செய்து கொள்ளலாம். அவ்வாறு பாலிசி ரத்து செய்யப்படும் நிலையில், மீதமுள்ள காலத்துக்கான பாலிசி பிரீமியத்தை, நிறுவனம் பாலிசிதாரருக்கு திரும்ப வழங்க வேண்டும்.  செட்டில்மென்ட் கோரப்பட்ட குறிப்பிட்ட கால வரம்புக்குள், அதுகுறித்து சரிபார்க்க சர்வேயர்களை நியமித்து அறிக்கை பெற வேண்டும். அறிக்கை பெற்ற ஏழு நாட்களுக்குள் காப்பீடு தொகையை வழங்க வேண்டும்.  வீட்டு உரிமையாளர்களுக்கு தீ விபத்துக்கான காப்பீடோடு சேர்த்து, வெள்ளம், புயல், நில நடுக்கம், நிலச்சரிவு, தீவிரவாதம் உள்ளிட்ட காரணங்களுக்கான காப்பீடு பெறவும் வாய்ப்புகள் வழங்க வேண்டும்.  விபத்துகளில் சேதமடையும் வாகனங்களுக்கான முழு காப்பீடு தொகையையும் பாலிசிதாரருக்கு வழங்க வேண்டும். சேதமடைந்த வாகனத்தை பயன்படுத்தி காப்பீடு நிறுவனமே தொகையை ஈட்டிக் கொள்ள வேண்டும். பாலிசிதாரருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் அனைத்துமே உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை