புதுடில்லி:இந்தியாவில், மொத்த தொலைதொடர்பு சந்தாதாரர்கள் எண்ணிக்கை, கடந்த மார்ச் மாதத்தில், 119.92 கோடியாக அதிகரித்துள்ளதாக, 'டிராய்' எனும் இந்திய தொலைதொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.நாட்டின் மொத்த தொலைதொடர்பு சந்தாதாரர்கள் எண்ணிக்கை, கடந்த பிப்ரவரி மாதத்தில், 119.77 கோடியாக இருந்தது. இந்த நிலையில், புதிய சந்தாதாரர்கள் இணைக்கப்பட்டதை அடுத்து, மொத்த எண்ணிக்கை, கடந்த மார்ச்சில், 119.92 கோடியாக உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில், 'ஜியோ' நிறுவனம் 21.40 லட்சம் சந்தாதாரர்களையும், 'ஏர்டெல்' நிறுவனம் 17.50 லட்சம் சந்தாதாரர்களையும், புதிதாக சேர்த்துள்ளன. அதேசமயம், வோடபோன் ஐடியா, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகிய நிறுவனங்கள், முறையே 6.80 லட்சம், 23.50 லட்சம், 4,674 வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.பிராட் பேண்டு சந்தாதாரர்கள் எண்ணிக்கையும், கடந்த பிப்ரவரியில் 91.67 கோடியாக இருந்தது, 92.40 கோடியாக உயர்ந்துள்ளது.