உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சிறு தவறுகளை சுட்டிக்காட்டி கப்பலில் ஏற்ற தடுக்கின்றனர் தொழில்முனைவோர் குமுறல்

சிறு தவறுகளை சுட்டிக்காட்டி கப்பலில் ஏற்ற தடுக்கின்றனர் தொழில்முனைவோர் குமுறல்

சென்னை:திருப்பூரில் இருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் ஆயத்த ஆடைகள் ஏற்றப்பட்டு, சென்னை, துாத்துக்குடி துறைமுகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் வணிக வரித்துறை அதிகாரிகள், ஜி.எஸ்.டி., ஆவணத்தில் சிறு தவறுகள் இருந்தாலும், லாரிகளை முடக்கி வைத்து விடுவதாகவும்; இதனால், கப்பலை தவற விடும் நிலை ஏற்படுவதாகவும், புகார்கள் எழுந்துள்ளன.இதுகுறித்து, ஆயத்த ஆடை தொழில்முனைவோர்கள் கூறியதாவது:ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடைகளை, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அனுப்பு வதற்காக லாரிகளில் எடுத்துச் செல்லும்போது, ஜி.எஸ்.டி., வரி கோட்பாட்டின் படி, ஆவணங்கள் தயாரித்து அனுப்பப்படுகின்றன.இந்த ஆவணங்களில், வாகன எண் பதிவு செய்வதில் தவறு உள்ளிட்ட சில மனித தவறுகள் ஏற்பட்டு விடுகின்றன. வணிகவரித் துறை அதிகாரிகள், வாகனங்களை மடக்கி சோதனை செய்யும்போது, சிறு சிறு தவறுகளை பெரிதுபடுத்தி, லாரிகளை அனுப்பாமல் முடக்குகின்றனர்.இதனால், துறைமுகத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியாததால், கப்பலில் அனுப்ப முடியாமல் சரக்குகள் தேக்கமடைகின்றன. ஒரு வாகனத்தில் சோதனை நடத்தும்போது, சிறு தவறு இருந்தால், அந்நிறுவனத்தின் பின்னணியை உடனே சரிபார்த்து, ஜி.எஸ்.டி., ஒழுங்காக தாக்கல் செய்யப் பட்டுள்ளதா என்பதை அறியும் வசதி உள்ளது. சிறிய அளவிலான மனித தவறுக்கு, 500 ரூபாய் முதல், 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வழிவகை உள்ளது. ஆனால், லாரிகள் முடக்கப் படுவதால் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.கொரோனா பாதிப்புகளுக்கு பின், ஆயத்த ஆடை தொழில் ஒருவழியாக மீண்டு வரும் சூழலில், சோதனை என்ற பெயரில் லாரிகளை முடக்கும் பிரச்னைக்கு, முதல்வர் தலையிட்டு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை