| ADDED : ஜூலை 24, 2024 11:47 PM
புதுடில்லி:சிறப்பான சந்தை சூழல் மற்றும் புதிய வணிக வாய்ப்புகளின் காரணமாக, நடப்பு ஜூலை மாதத்தில், நாட்டின் தனியார் துறை செயல்பாடுகள் வேகமெடுத்துள்ளன. இதன் காரணமாக, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு, தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையை சேர்த்த 'பிளாஷ் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு' ஜூலையில் 61.40 புள்ளிகளாக அதிகரித்து உள்ளது.எச்.எஸ்.பி.சி., வங்கி, தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையில் இயங்கி வரும் பல்வேறு நிறுவனங்களின் ஒவ்வொரு மாத நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடு குறித்த அறிக்கை வெளியிடுவது வழக்கம்.சமீபகாலமாக, இதற்கு முன்னோட்டமாக 'பிளாஷ்' பி.எம்.ஐ., குறியீட்டையும் இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதற்கான தரவுகளை, 'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' நிறுவனம் திரட்டி வருகிறது.ஜூலை மாதத்துக்கான அறிக்கையில் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:நடப்பு ஜூலை மாதத்தில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறைகளில் வளர்ச்சி மேலும் வலுவடைந்தது. தயாரிப்பு துறை வளர்ச்சி, கடந்த மாதத்தின் 58.30 புள்ளிகளிலிருந்து இம்மாதம் 58.50 புள்ளிகளாக அதிகரித்து உள்ளது. பொதுவாக, 50 புள்ளிகளுக்கு மேல் இருப்பின் வளர்ச்சியாகக் கருதப்படும்.தனியார் நிறுவனங்களுக்கான புதிய ஆர்டர்கள் மூன்று மாத உச்சத்தை எட்டின. தயாரிப்பு மற்றும் சேவைகள் இரண்டிலும் உற்பத்தியும், விரிவாக்கப் பணிகளும் வேகமெடுத்தன. இதன் காரணமாக பணியமர்த்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சேவைகள் துறையைக் காட்டிலும், தயாரிப்பு துறையில் பணியமர்த்தல்கள் வலுவாக உள்ளது. மூலப்பொருட்கள், போக்குவரத்து மற்றும் பணியாளர் செலவு அதிகரித்ததன் காரணமாக, உள்ளீட்டு விலை அதிகரித்து உள்ளது. இதோடு சேர்த்து தேவையும் அதிகரித்துள்ளதால், நிறுவனங்கள் விற்பனை விலையை அதிகரித்துள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளது.