| ADDED : ஜூன் 13, 2024 01:30 AM
புதுடில்லி:உள்நாட்டு தேவை அதிகரிப்பின் காரணமாக உருக்கு இறக்குமதி, ஏப்ரல், மே மாதங்களில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், சீனாவிலிருந்து அதிகளவில் உருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, டாடா ஸ்டீல் கவலை தெரிவித்துள்ளது.அரசு தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் உருக்கு இறக்குமதி, கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கட்டுமானம் மற்றும் வாகனத் துறைகளின் வலுவான தேவை காரணமாக, இந்தியாவின் இறக்குமதி அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களுக்கு இடையில், இந்தியா 11 லட்சம் டன் உருக்கு இறக்குமதி செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 19.80 சதவீதம் அதிகமாகும் என தரவுகள் தெரிவிக்கின்றன. சமீப மாதங்களாக, இந்தியாவுக்கு அதிக அளவிலான உருக்கு ஏற்றுமதியை செய்து வரும் நாடுகளாக தென்கொரியாவும், சீனாவும் உள்ளன. இதில், சீனா முதலிடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியா, 83 லட்சம் டன் உருக்கை இறக்குமதி செய்துள்ளது.