புதுடில்லி, மே 5-கடந்த மாதம் நாட்டின் ஜி.எஸ்.டி., வருவாய் 2.10 லட்சம் கோடி ரூபாய் என்ற சாதனை உச்சத்தை எட்டியது. அத்துடன் வரிவசூல் வருவாயில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளி, நான்காவது இடத்தை உத்தரபிரதேச மாநிலம் பிடித்தது.வழக்கமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகியவை, ஜி.எஸ்.டி., வருவாய் பங்களிப்பில், முதல் நான்கு இடங்களில் இருக்கும். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், 19 சதவீத வளர்ச்சியுடன், தமிழகத்தை பின்னுக்குத் தள்ளி, உத்தர பிரதேசம் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழகம் 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து ஐந்தாம் இடத்துக்கு வந்தது. அதிகரிப்பு
உத்தர பிரதேசத்தின் இந்த வருவாய் வளர்ச்சிக்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும், கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்ட ராமர் கோவில் முக்கிய இடத்தை பிடித்திருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.ராமர் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து, உத்தர பிரதேசத்திற்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் உ.பி.,க்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணியரின் செலவினம் 4 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்றும்; இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில், இம்மாநிலத்திற்கு 20,000 முதல் 25,000 கோடி ரூபாய் வரை, கூடுதல் வரி வருவாய் கிடைக்கும் என்றும், 'எஸ்.பி.ஐ., ரிசர்ச்' நிறுவனம், சமீபத்தில் அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது. ஜி.எஸ்.டி., முறையில் பயண நிறுவனங்களுக்கு 5 முதல் 18 சதவீதமும்; விமான பயணங்களுக்கு 5 முதல் 12 சதவீதமும்; தங்கும் விடுதிகளுக்கு 12 முதல் 18 சதவீதமும் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டிலேயே மூலதன செலவினங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கும் மாநிலமாக உ.பி., இருந்து வருகிறது. நாட்டிலேயே இரண்டாவது பெரிய சாலை வசதியைக் கொண்ட மாநிலமாகவும் உ.பி., உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான அம்மாநில பட்ஜெட்டில் மூலதன செலவினத்துக்கு 1.55 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2021-22ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 68,000 கோடி ரூபாயை விட, 126.70 சதவீதம் அதிகமாகும். இந்த தொகை சாலைகள் அமைக்கவும் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தவும் செலவழிக்கப்படுகிறது. இந்த திட்டங்களை செயல்படுத்தும் போது, சிமென்ட் உள்ளிட்ட மூலப் பொருட்கள் வாயிலாக வரி வருவாய் அதிகரிக்கிறது. சிமென்ட்டுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்த மாநிலமாகவே இருந்து வந்த உ.பி., சமீபகாலமாக தொழில்மயமாக்கலை சந்தித்து வருகிறது. இதனால், நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிறுவனங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. இவை போன்ற காரணங்களால் உ.பி., மாநிலத்தின் ஜி.எஸ்.டி., வருவாய் அதிகரித்துள்ளது.