உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மகளிர் ஸ்டார்ட் அப் இந்தியா இரண்டாம் இடம்

மகளிர் ஸ்டார்ட் அப் இந்தியா இரண்டாம் இடம்

புதுடில்லி:உலகளவில் இதுவரை அதிக முதலீடுகளைத் திரட்டிய பெண்கள் நடத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக தரவு தளமான 'டிராக்சன்' இது தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.இதில் இந்தியா தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள மொத்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 7.50 சதவீதம், அதாவது 7,000க்கும் அதிகமானவை பெண்களால் நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் இதுவரை கிட்டத்தட்ட 2.30 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்டியுள்ளனர்.அதிகபட்சமாக சில்லரை வணிகப் பிரிவில் 67,900 கோடி ரூபாயும்; கல்வி தொழில்நுட்பப் பிரிவில் 47,000 கோடி ரூபாயும்; மென்பொருள் தள வடிவமைப்பில் 43,000 கோடி ரூபாயும் நிதி திரட்டியுள்ளனர். பெண்கள் தலைமை வகிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக முதலீடுகளைத் திரட்டிய நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. கடந்தாண்டைப் பொறுத்தவரை, பெண் நிறுவனர் அல்லது இணை நிறுவனரைக் கொண்ட நிறுவனங்கள் அதிக முதலீடுகளைத் திரட்டிய நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, பிரிட்டனுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. பெண்கள் நடத்தும் ஸ்டார்ட் அப்கள் கையகப்படுத்தப்படுவதும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 2022ல் 36 ஆகவும், 2023ல் 25 ஆகவும் இருந்த இதன் எண்ணிக்கை, கடந்தாண்டு 16 ஆகக் குறைந்துள்ளது. மொபிக்விக், உஷா பைனான்சியல், துன்வால், இன்டீரியர்ஸ் அண்டு மோர், லாசிகோ ஆகிய பெண்கள் தலைமையிலான ஐந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடந்தாண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி