உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  வரி வசூலில் 50 சதவீதத்தை வளர்ச்சிக்கு செலவிட வேண்டும்

 வரி வசூலில் 50 சதவீதத்தை வளர்ச்சிக்கு செலவிட வேண்டும்

கோவை: வசூலிக்கும் வரியில் 50 சதவீதத்தை வளர்ச்சிக்கு செலவிட வேண்டும் என, கோவையில் நடந்த ஜி.எஸ்.டி., விளக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு, இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பான, 'பிக்கி' சார்பில், ஜி.எஸ்.டி., விளக்கக் கூட்டம், நீலாம்பூரில் நேற்று நடந்தது. வரி செலுத்துவோர் அமைப்பின் தலைவர் சாந்தகுமார், சிட்டி யூனியன் வங்கியின் பொது மேலாளர் சுப்பிரமணியன், கிராப்ஸ்ட்மேன் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் இணை இயக்குநர் கவுதம் மற்றும் பல்வேறு தொழில் துறையினர் பங்கேற்றனர். பின்னர், நிருபர்களிடம் சாந்தகுமார் கூறியதாவது: ஜி.எஸ்.டி., 2017ல் அறிமுகமானது. ஐந்து ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து ஜவுளி, வங்கி, பொறியியல், ஜூவல்லரி, மருத்துவம் துறைகளை சார்ந்தவர்களிடம், கருத்துகளை கேட்டறிந்து உள்ளோம். நகரில் செலுத்தப்படும் வரியில், நகருக்கு தேவையான மேம்பாடு, வளர்ச்சிக்கு 50 சதவீதத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாநில அரசு, 25 சதவீதம்; மத்திய அரசு, 25 சதவீத வரியையும், அந்தந்த வசூலிக்கும் நகரங்களிலேயே பிரித்து அளிக்க வேண்டும். மக்கள் அதிகம் செலவிடும் எரிசக்தி, ஆற்றல் துறைகளான பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு, மின்சாரம் போன்றவற்றை ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை