உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பயிர் காப்பீடு திட்டம்: ரூ.35 கோடி பட்டுவாடா

பயிர் காப்பீடு திட்டம்: ரூ.35 கோடி பட்டுவாடா

சென்னை: நீர் பற்றாக்குறையால், சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், 35 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது.பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்துகின்றன. வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்போது, பயிர் அறுவடை ஆய்வு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. நெல் பயிர் முழுமையாக பாதித்தால், ஒரு ஏக்கருக்கு 29,000 ரூபாய் வரை, விவசாயிகளுக்கு நிவாரணமாக கிடைக்கும். நீர் பற்றாக்குறை, வறட்சி உள்ளிட்ட காரணங்களால், சாகுபடி செய்ய முடியாத சூழல் ஏற்படும்போதும், இழப்பீடு பெற, பயிர் காப்பீடு திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2022-23ம் ஆண்டு, 4.64 லட்சம் தமிழக விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடாக 850 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.நீர் பற்றாக்குறை காரணமாக, தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், 2023-24ம்ஆண்டு விதைப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள், உரிய ஆவணங்களுடன், பயிர் காப்பீடு நிவாரணம் பெற, தமிழக வேளாண்துறை வாயிலாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், 15,675 விவசாயிகளுக்கு 35.5 கோடி ரூபாய் நிவாரணமாக காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டு உள்ளது. அதில், தஞ்சாவூர் மாவட்டத்தில், 7,647 விவசாயிகளுக்கு 18.28 கோடி ரூபாய்; திருச்சி மாவட்டத்தில் 8,028 விவசாயிகளுக்கு 17.24 கோடி ரூபாய் நிவாரணமாக கிடைத்து உள்ளது.பயிர் காப்பீடு திட்டத்தில் பயன் கிடைப்பதால், காப்பீடு செய்வதில் விவசாயிகள் ஆர்வமும் அதிகரித்து உள்ளது. நடப்பு பருவத்தில், இதுவரை 31 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு, 13.5 லட்சம் விவசாயிகள் காப்பீடு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ