மேலும் செய்திகள்
உள்கட்டமைப்பு நிறுவனத்தை கையகப்படுத்திய அதானி குழுமம்
10 minutes ago
'நாட்டின் முட்டை தலைநகர்' என பரவலாக அறியப்படுவது, தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம். தற்போது, முட்டையின் விலை வரலாற்றிலேயே முதன்முறையாக 6.10 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டின் அதிகபட்ச விலை 5.95 என்ற நிலையில், 6 ரூபாயை இப்போதுதான் தாண்டுகிறது. மொத்த வர்த்தகர்கள் கொள்முதல் செய்யும் முட்டை விலை இது என்பதால், நுகர்வோரின் கையில் போய் சேரும்போது இது மேலும் உயர்ந்து, அவர்களின் செலவிலும் ஓரளவு தாக்கம் ஏற்படுத்தும். பொருளாதார அங்கம் இந்தியா ஆண்டுதோறும் 14,200 கோடி முட்டைகள் தயாரித்து, உலகில் இரண்டாவது பெரிய முட்டை உற்பத்தி நாடாக திகழ்கிறது. முட்டை ஏற்றுமதியில் நாமக்கல் 85 முதல் 90 சதவீதம் வரை பங்காற்று கிறது. இதனால் நாமக்கல்லில் ஏற்படும் விலை மாற்றம் தேசிய அளவில் சந்தையை பாதிக்கும். என்.இ.சி.சி.,யின் வேலை முட்டை விலை நிர்ணயத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டி யான என்.இ.சி.சி., முக்கிய பங்கு வகிக்கிறது. இது அரசு அமைப்பு அல்ல; விவசாயிகள் சார்ந்த கூட்டுறவு போன்ற அமைப்பு. 1990களில் பிரபலமான, ஞாயிறோ, திங்களோ தினமும் முட்டை தினமே என்ற விளம்பர ஈர்ப்பு இதன் பிரசாரமே. 1970, 80களில் முட்டை விலை, உற்பத்தி செலவை விட குறைவாக இருந்தது. வியாபாரிகள் விலையை கட்டுப்படுத்தி, குளிர்சாதனத்தில் சேமித்து, விவசாயிகளை நட்டத்தில் தள்ளிய சூழலில், வெங்கீஸ் நிறுவனத்தின் நிறுவனர், டாக்டர் பி.வி.ராவ், நாடு முழுதும் முட்டை உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து, விலை வீழ்ச்சியை தடுக்க என்.இ.சி.சி.,யை 1982ல் உருவாக்கினார். 2022 வரை இதற்கு 25,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். பகுதி வாரியான குழுக்கள் தினசரி தேவைகள், செலவுகள், தீவன விலை, மின்சாரம், தொழிலாளர் செலவு போன்றவற்றை கணக்கிட்டு, அதற்கேற்ப முட்டை விலையை அறிவிக்கின்றன. ஆனால், தேசிய முட்டை ஒருங்கிைணப்பு கமிட்டிக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. விலை அறிவிப்பை ஆலோசனையாக மட்டுமே வெளியிடும். ஆனால், நடைமுறையில் அது கட்டாயமென பார்க்கப்பட்டதை இந்திய போட்டி ஆணையமான சி.சி.ஐ., 2022ல் சுட்டிக்காட்டியது. விலையை ஒருமைப்படுத்த அழுத்தம் தருவது, குறைந்த விலையில் விற்கும் உற்பத்தியாளர்களுக்கு மறைமுக எச்சரிக்கைகள், தேவையில்லாமல் கோழிகளை முன்கூட்டியே அழித்தல், முட்டைகளை வைத்திருந்து சப்ளையை குறைத்து விலையை உயர்த்துதல் ஆகிய நடவடிக்கைகளால் ஏகபோக செயல்பாடு எனக்கூறியது சி.சி.ஐ., இந்த உத்தரவுக்கு பின், தாங்கள் விலை நிர்ணயம் தொடர்பாக பரிந்துரை மட்டுமே வழங்குவதாக என்.இ.சி.சி., தெளிவுபடுத்த வேண்டியிருந்தது. ஆனாலும், 25,000 விவசாயிகள் ஒரே தளத்தை பின்பற்றுவதால், அந்த விலையே சந்தை விலையாக இன்று வரை மாறுகிறது. விலை உயர காரணம் உற்பத்தி குறைவு தொடர்ச்சியான மழையால் கோழி தீவனமான மக்காச்சோள சப்ளை பாதிக்கப்பட்டது. ஈரப்பதம் காரணமாக பூஞ்சை தொற்றுகள் ஏற்பட்டதால் தீவன தரம் குறைந்து, 7-10 சதவீத உற்பத்தி சரிவு. தேவை அதிகரிப்பு வடஇந்தியாவில் பருவ மழைக்கால நீட்டிப்பு, உடனடி குளிர்கால துவக்கத்தால் முட்டை நுகர்வு அதிகரித்திருக்கிறது. பேக்கரி உணவுகள், கேக் உற்பத்தி அதிகரிப்பதால், கூடுதலாக 20 - 30 லட்சம் முட்டைகள் தேவைப்படுகிறது புரதச்சத்து விழிப்புணர்வு முட்டை இன்னும் மிக குறைந்த விலையில் கிடைக்கும் புரதத்தின் ஆதாரமாக உள்ளது. ஒரு முட்டையில் 5 - 6 கிராம் புரதம் கிடைப்பதால், பயன்பாடு அதிகளவில் நடக்கிறது. முட்டை விலை உயர்ந்தாலும், அதனால் உற்பத்தியாளர்களுக்கு லாபமா என்றால், இல்லை என்பதே அவர்களது பதிலாக வருகிறது. நாமக்கலில் ஒரு முட்டையின் உற்பத்தி செலவு 4.50 - 4.75 ரூபாய். கொள்முதல் விலை 6 ஆனாலும் லாபம் மிகக் குறைவு. மேலும், நிலையான வருமானம் இல்லை. எனவே, சில மாற்றங்கள் தேவை என்கின்றனர், முட்டை உற்பத்தியாளர்கள். நிலையான தீவன விலை முட்டை உற்பத்தியில் முக்கிய செலவான தீவனத்தின் பங்கு 60 -70 சதவீதம். அதில் நிலைத்தன்மை கொள்கைகளை அரசு உருவாக்க வேண்டும். பறவை காய்ச்சல் தடுப்பு பறவை காய்ச்சலை தடுப்பதில், கண்டுபிடித்து கோழியை அழிக்கும் முறையை நம்நாடு பின்பற்றுகிறது. தடுப்பூசி கொள்கை அமலானால், அதிகளவு கோழி அழிப்பை தவிர்க்கலாம். இந்த மாற்றங்கள் வந் தால், முட்டை உற்பத்தியாளர் களுக்கு நிலையான வருமானம், நிலையான விலை கிடைப்பதுடன், அதிக ஏற்றத்தாழ்வின்றி நியாயமான விற்பனை விலையும் சாத்தியமாகும் என்கின்றனர் இத்துறையினர். நாமக்கல்லில் தினமும் சுமார் 6 கோடி முட்டைகள் தயாராகின்றன மொத்த உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்.இ.சி.சி., வருகையால்... விவசாயிகள் நியாயமான விலையைப் பெறத் தொடங்கினர் நுகர்வோரின் முட்டை பயன்பாடு அதிகரித்தது விலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
10 minutes ago