உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  தினசரி பஞ்சு வரத்து 2.50 லட்சம் பேல் இருப்பு வைக்காமல் விற்கும் விவசாயிகள்

 தினசரி பஞ்சு வரத்து 2.50 லட்சம் பேல் இருப்பு வைக்காமல் விற்கும் விவசாயிகள்

திருப்பூர்: பஞ்சு விலையில் பெரிய மாற்றம் ஏற்படாததால், விளைவிக்கப்பட்ட பருத்தியை, விவசாயிகள் இருப்பு வைக்காமல் விற்று வருகின்றனர். இதனால், தினசரி பஞ்சு வரத்து, 2.50 லட்சம் 'பேல்' என்ற அளவை தொட்டுள்ளது. புதிய பருத்தி சீசன் (2025 அக்., - 2026 செப்.,) அக்., மாதம் துவங்கியது. பருத்தி மகசூலை அதிகரிக்க செய்வதற்கான திட்டங்களை மத்திய அரசு துவக்கியுள்ளது. இருப்பினும், நடப்பு பருத்தி ஆண்டிலும், மகசூல் குறையுமென, மத்திய ஜவுளித்துறை கமிஷனர் அலுவலகம் கணக்கிட்டு உள்ளது. பஞ்சு வரத்து 292 லட்சம் பேல் (ஒரு பேல் 170 கிலோ) உட்பட, மொத்த பஞ்சு கையிருப்பு, 377 லட்சம் பேல் என இருக்கும். அதில், நுாற்பாலைகள் தேவைக்கு மட்டும், 306 லட்சம் பேல் தேவையென கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய பருத்தி கழகமும், விவசாயிகளுக்கு ஆதரவு விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, பஞ்சு கொள்முதலை வேகப்படுத்தியுள்ளது. பருத்தி சீசனில் கிளைமாக்ஸ் எனப்படும் டிச., - ஜன., மாதங்களில் பஞ்சு விலை வேகமாக உயர வாய்ப்பில்லை என்பதால், வியாபாரிகளும், இருப்பு வைக்காமல், விற்பனைக்கு கொண்டு வருவது அதிகரித்துள்ளது. தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் (டாஸ்மா) தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது: பஞ்சு வரத்து வேகமெடுத்துள்ளதால், விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உருவானால் மட்டுமே, பஞ்சுக்கான தேவை திடீரென அதிகரிக்கும். அதுவரை இதேநிலை தொடரும். இருப்பினும், நடப்பு ஆண்டில் மகசூல் மேலும் குறையுமென அரசு தரப்பு தெரிவித்துள்ளது. பஞ்சு இறக்குமதிக்கான வரிவிலக்கு சலுகை, வரும் மூன்று நாட்களில் நிறைவடைய உள்ளது. உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக, இச்சலுகை மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.  கடந்த மாதங்களில், ஒரு லட்சம் பேல் தாண்டியிருந்த தினசரி பஞ்சு வரத்து, இம்மாதம், 2.5 லட்சம் பேல் தொட்டுள்ளது  கடந்த ஆண்டில், ஒரு கேண்டி (365 கிலோ), 53,500 முதல், 54,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது;  தற்போது ரூ.54,000 ஆக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை