வாகன உடைப்பு விலை நிர்ணயம் அரசு தலையிடாது: நிதின் கட்கரி
புதுடில்லி:வாகன உடைப்புக்கான உரிய விலையை நிர்ணயம் செய்வதில் அரசு தலையிடாது என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் மக்களவையில் தெரிவித்திருப்பதாவது: 'ஸ்கிராப்' எனப்படும் மிகப் பழைய வாகன உடைப்புக்கு விலை நிர்ணயம் செய்வதில், அரசின் தலையீடு இருக்காது. அதற்கான விலையை, அந்த சந்தையே தீர்மானிக்கும். பழைய வாகன உடைப்புக்காக தனியார் நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள மையங்கள், வாகனத்தின் நிலையைப் பொறுத்து, அதற்குரிய விலையை உரிமையாளர்களுக்கு வழங்கும். பழைய அரசு வாகனங்கள் உடைப்புகளுக்கான விலையை, மத்திய உருக்கு துறை அமைச்சகம் நிர்ணயிக்கும். அதேவேளையில், பொதுமக்கள் பயன்படுத்திய வாகன உடைப்புக்கான விலையை நிர்ணயிப்பதில் அரசு தலையிடுவதில்லை. இருப்பினும், குறைந்த வருமானம் கொண்ட மக்கள் மீதான பொருளாதார சுமைகளை குறைக்கும் வகையில், உடைக்கப்படும் வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. உடைக்கப்பட்ட வாகனங்களுக்காக வழங்கப்பட்ட சான்றிதழுடன் வாங்கப்படும் புதிய வாகனங்களுக்கு, பதிவு கட்டணத் தள்ளுபடியும் செய்யப்படுகிறது. மேலும், புதிதாக வாங்கப்படும் தனிநபர் வாகனங்களுக்கு 25 சதவீதமும்; வர்த்தக வாகனங்களுக்கு 15 சதவீதமும், மோட்டார் வாகன வரியில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. புதிய வாகனத்தின் விலையிலும், நிறுவனங்கள் 3 முதல் 5 சதவீத தள்ளுபடி வழங்குகின்றன. இந்த சலுகை, பொது போக்குவரத்து வாகனங்களுக்கு எட்டு ஆண்டுகள் வரையிலும், பிற வாகனங்களுக்கு 15 ஆண்டுகள் வரையிலும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.