என்.எஸ்.டி.எல்., சொத்து மதிப்பு ரூ.500 லட்சம் கோடியை தொட்டது
புதுடில்லி:மின்னணு பங்கு ஆவண காப்பக நிறுவனமான, என்.எஸ்.டி.எல்., டிமேட் வடிவில் பராமரிக்கும் பங்குகளின் மதிப்பு, நேற்று முன்தினம், 500 லட்சம் கோடியை தொட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.இதுகுறித்து என்.எஸ்.டி.எல்., இடைக்கால நிர்வாக இயக்குனர் கோபாலன் கூறியதாவது:எங்களது பாதுகாப்பில், குறிப்பிடத்தக்க சாதனை அளவில் பங்குகளின் மதிப்பு, 500 லட்சம் கோடியை தொட்டிருப்பதை பெருமையாக கருதுகிறோம். இது ஒரு மைல்கல் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். கண்காணிப்பு அமைப்புகள், பங்குத் தரகு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், துறை சார்ந்த மற்றவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். நாட்டின், 99.30 சதவீத அஞ்சல் குறியீடுகளைச் சேர்ந்த முகவரிகளில் இருந்து, முதலீட்டாளர்களின் கணக்குகளை பராமரித்து வரும் என்.எஸ்.டி.எல்., மதிப்பின் அடிப்படையில் டிமேட் சொத்துக்கள் பராமரிப்பில், 86 சதவீத பங்கு வகிக்கிறது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 63,000 சேவை மையங்கள் இந்நிறுவனத்துக்கு உள்ளன.கடந்த 2014ல், 100 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, ஆறு ஆண்டுகளில் 200 லட்சம் கோடியாக உயர்ந்தது. நான்கே ஆண்டுகளில், 2024 அக்டோபரில் இரண்டரை மடங்கு அதிகரித்து, 500 லட்சம் கோடி ரூபாயை தொட்டுள்ளது.