உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  துாத்துக்குடி அறைகலன் பூங்கா 4 நிறுவனங்கள் மட்டுமே ஆர்வம்

 துாத்துக்குடி அறைகலன் பூங்கா 4 நிறுவனங்கள் மட்டுமே ஆர்வம்

சென்னை:துாத்துக்குடியில் மரச்சாமான்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆலை அமைக்க, தமிழக அரசின், 'சிப்காட்' நிறுவனம் அமைத்த தனி தொழில் பூங்காவில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே செயல்படத் துவங்கியுள்ளன. பூங்காவில் தொழில் துவங்கிய நான்கில் ஒன்று, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகும். 1,128 ஏக்கரில் அறைகலன் பூங்கா அமைக்கப்பட உள்ள நிலையில், முதல் கட்டமாக, 955 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தொழில் மனைகள், ஏற்றுமதி சார்ந்த மரச்சாமான்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. இப்பூங்காவுக்கு, 2022ல் அடிக்கல் நாட்டப்பட்டு முதல் கட்டமாக, 279 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அறைகலன் பூங்கா வாயிலாக, 5,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், 3.50 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை, 'மேனர், சைலோசூஸ், கிரெஸ்ட் லாஷிங் நிறுவனங்கள் மட்டுமே தொழில் துவங்க வந்துள்ளன. அவற்றுக்கு, 135 ஏக்கர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு நிறுவனமான, டிட்கோ, 10 ஏக்கரில் வர்த்தக வசதி மையம் அமைக்க உள்ளது. இதுகுறித்து, தொழில் துறையினர் கூறியதாவது: மரச்சாமான் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை, நம் நாட்டுடன் ஒப்பிடும் போது, வெளிநாடுகளில் குறைவாக உள்ளது. துாத்துக்குடி அறைகலன் தொழில் பூங்காவில், ஏற்கனவே திட்டமிட்டபடி தயார் நிலை தொழிற்கூடம், ஆராய்ச்சி மேம்பாட்டு மையம், தர சோதனை மையம், திறன் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை அரசு விரைவாக அமைக்க வேண்டும். இதன் வாயிலாக, அந்த பூங்காவில் முதலீடுகளை ஈர்க்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.  நாட்டிலேயே துாத்துக்குடியில் தான், அறைகலன் தொழிலுக்கான முதல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது  தொழில் பூங்காவில் ஏக்கர் மனை விலை, 60 லட்சம் ரூபாய். 50% மானிய விலையில் நிலம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை