உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பி.எப்., பணத்தை ஏ.டி.எம்.,மில் எடுக்கலாம் புதிய சலுகைகளுடன் வருகிறது பி.எப்., 3.0

பி.எப்., பணத்தை ஏ.டி.எம்.,மில் எடுக்கலாம் புதிய சலுகைகளுடன் வருகிறது பி.எப்., 3.0

புதுடில்லி:வருங்கால வைப்பு நிதியான பி.எப்., கணக்கில் இருந்து பணத்தை, ஏ.டி.எம்., வாயிலாக எடுத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்த இ.பி.எப்.ஓ., திட்டமிட்டுள்ளது.வருமான வரித் துறையின் சார்பில், 'பான் 2.0' என்ற பெயரில் நிரந்தரக் கணக்கு எண்ணுக்கான மின்னணு வசதிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது போலவே, 'பி.எப்., 3.0' என்ற பெயரில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிலும், கூடுதல் வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.மாத ஊதியத்தில் தொழிலாளர் மற்றும் நிர்வாகம் சரிசமமாக 12 சதவீதத்தை தற்போது பி.எப்., கணக்கில் செலுத்தி வரும் நிலையில், தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய தொகைக்கான உச்ச வரம்பை மட்டும் நீக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, பாதுகாப்பான அதேநேரம் நிதிச் சந்தையில் நியாயமான வட்டி கிடைக்கக்கூடிய பி.எப்., தொகையை, தொழிலாளர் விரும்பினால் கூடுதலாகவும் சேமிக்க இது வழி செய்யும்.தொழிலாளர் 12 சதவீதத்துக்கு கூடுதலான தொகையை பி.எப்., கணக்கில் சேமித்தாலும், நிர்வாகம் தரப்பில் 12 சதவீதம் செலுத்த வேண்டிய விதிமுறையில் மாற்றம் இருக்காது. மேலும், பி.எப்., கணக்குக்கு, 'டெபிட் கார்டு' போல அட்டை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பி.எப்., பணத்தில் ஒரு பகுதியை திரும்ப பெற விண்ணப்பித்து, ஒப்புதல் கிடைத்ததும், ஏ.டி.எம்.,மில் தொகையை தேவைக்கேற்ப சந்தாதாரர் எடுத்துக்கொள்ள இது வழி செய்கிறது. அடுத்த ஆண்டு மே அல்லது ஜூனில் இந்த வசதி அறிமுகமாகும் என தெரிகிறது.

கெடு இன்று முடிகிறது

வேலையுடன் இணைந்த ஊக்கத்தொகையான இ.எல்.ஐ., சலுகைகளை பெற, பி.எப்., பிரத்யேக எண்ணான யு.ஏ.என்., மற்றும் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள். எனவே, பி.எப்., கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்கள், இன்றே இணைப்பது அவசியம். இரண்டு ஆண்டுகளில், முறை சார்ந்த துறைகளில் ஊக்குவிப்பு வாயிலாக 20 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும் என 2024 பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, முதல்முறை வேலை யில் சேர்ந்து பி.எப்., உறுப்பினராகும், மாத ஊதியம் 1 லட்சத்துக்கு குறைவான சந்தாதாரர் கணக்கில் 15,000 ரூபாய் வரை வரவு வைக்கப்படும். இந்த ஊழியர்களை குறைந்தது 12 மாதங்களுக்கு நிறுவனம் பணியில் வைத்திருக்கத் தவறினால், பணம் திரும்ப பெறப்படும். இதுபோல, கூடுதல் ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கும், அவை செலுத்தும் பி.எப்., தொகையில் கணிசமான தொகை, ஊக்கத் தொகையாக திரும்ப வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ