உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  தர்மபுரி அதகபாடி தொழில் பூங்காவில் உணவு தொழிலை அனுமதிக்க கோரிக்கை

 தர்மபுரி அதகபாடி தொழில் பூங்காவில் உணவு தொழிலை அனுமதிக்க கோரிக்கை

சென்னை: தர்மபுரி மாவட்டம், அதகபாடியில் அமைக்கப்பட்டுள்ள தொழில் பூங்காவில் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் ஆலை அமைக்க அனுமதிக்கும் வகையில், தனி உணவு பூங்காவை உருவாக்குமாறு, தமிழக அரசின், 'சிப்காட்' நிறுவனத்திற்கு, தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள, தர்மபுரி மாவட்டத்தில் தொழில் துவக்குவதை ஊக்குவிக்க, அம்மாவட்டத்தின் அதகபாடி மற்றும் அதை சுற்றிய கிராமங்களில், 1,733 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, 2024ல் அனுமதி அளித்தது. முதற்கட்டமாக, 200 ஏக்கரில் உள்கட்டமைப்பு பணிகள் நடக்கின்றன. அதகபாடி தொழில் பூங்காவில் உள்ள மனைகள், மின் வாகனம், மின் வாகன உதிரிபாகங்கள், 'பேட்டரி' போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. அங்கு, உணவு தொழில் துவங்க அனுமதி அளிக்குமாறு, தொழில் முனைவோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, தொழில் முனைவோர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், திருச்சி மாவட்டம் மணப்பாறை, தேனியில் சிப்காட் நிறுவனத்துக்கு உணவு தொழில் பூங்காக்கள் உள்ளன. அதேசமயம், அதகபாடி சிப்காட் பூங்காவே, தர்மபுரியில் உருவாக்கப்பட்ட முதல் தொழில் பூங்கா. அருகில் உள்ள கிருஷ்ணகிரியில் மாம்பழம், தக்காளி விளைச்சலும், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் கேழ்வரகு சாகுபடியும் அதிகம் உள்ளது. அம்மாவட்டங்களில் புளி விளைச்சலும் நன்கு உள்ளது. எனவே, அதகபாடி பூங்காவில் உணவு பதப்படுத்தும் தொழில் துவங்க அனுமதிக்கும் வகையில், தனி உணவு தொழில் பூங்கா அமைக்கப்பட வேண்டும். இதனால், உள்ளூர் மக்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். தர்மபுரி மாவட்டம், அதகபாடியில் 1,733 ஏக்கரில் தொழில் பூங்கா அமைகிறது மின் வாகனம், உதிரிபாகங்கள், பேட்டரி உற்பத்தி நிறுவனங்களுக்கு இடம் உணவு பதப்படுத்தும் தொழில் துவங்க அனுமதிக்குமாறு கோரிக்கை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை