புதுடில்லி,:தயாரிப்பு துறையின் வளர்ச்சி சற்றே குறைந்துள்ள போதிலும், சேவைகள் துறையின் வலுவான வளர்ச்சி காரணமாக, நாட்டின் தனியார் நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகள், நடப்பு ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக, எச்.எஸ்.பி.சி., வங்கி தெரிவித்துள்ளது.எச்.எஸ்.பி.சி., வங்கி, தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையில் இயங்கி வரும் பல்வேறு நிறுவனங்களின் ஒவ்வொரு மாத நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடு குறித்த அறிக்கை வெளியிடுவது வழக்கம். சமீபகாலமாக, இதற்கு முன்னோட்டமாக 'பிளாஷ்' கூட்டு பி.எம்.ஐ., குறியீட்டையும் இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதற்கான தரவுகளை, 'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' நிறுவனம் திரட்டி வருகிறது.ஆகஸ்ட் மாதத்துக்கான அறிக்கையில் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் கூட்டு பிளாஷ் பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மாதம் 60.70 புள்ளிகளாக இருந்த நிலையில், இம்மாதம் 60.50 புள்ளிகளாக சற்றே குறைந்துள்ளது. எனினும் நாட்டின் வணிக நடவடிக்கைகள் தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். இந்நிலையில், தற்போது தொடர்ந்து 37வது மாதமாக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தயாரிப்பு துறை நிறுவனங்களுக்கு கிடைத்துள்ள புதிய ஆர்டர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உலகளாவிய தேவையில் மந்தநிலை காணப்படுவதால் ஏற்றுமதியும் குறைவான அளவிலேயே விரிவடைந்துள்ளது. இதன் காரணமாக, தயாரிப்பு துறை பிளாஷ் பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மாதத்தின் 58.10 புள்ளிகளிலிருந்து தற்போது 57.90 புள்ளிகளாக குறைந்துள்ளது. இருப்பினும், சேவைகள் துறை வலுவான செயல்பாட்டை வெளிப்படுத்தி கவலைகளை போக்கியுள்ளது. கடந்த மாதம் 60.30 புள்ளிகளாக இருந்த பி.எம்.ஐ., குறியீடு, இம்மாதம் 60.40 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.