சென்னை:தமிழகத்தில் உள்ள பட்டாணி மாவு தயாரிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க, 'ஆஸ்திரேலியன் கஸ்பா பீஸ்' பட்டாணியை இறக்குமதி செய்ய, மத்திய அரசுக்கு அழுத்தம் தருமாறு, தமிழக அரசுக்கு வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து, உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் மற்றும் நிர்வாகிகள், தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணியை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:தமிழகத்தில் குறிப்பாக துாத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில், வெளிநாடுகளில் இருந்து பட்டாணி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்தது. இதனால், பட்டாணியை உடைத்து பருப்பாக தயாரிக்க, பட்டாணி மாவு தயாரிக்க நிறுவனங்கள் பல நிறுவப்பட்டன.கடந்த ஐந்து ஆண்டுகளாக, மத்திய அரசு பட்டாணி இறக்குமதிக்கு தடை விதித்ததால், அனைத்து நிறுவனங்களும் செயல்படாமல் இருந்தன. தொடர்ந்து, மத்திய அரசை வலியுறுத்தியதால், 2023 டிசம்பரில் இருந்து பட்டாணி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியது.தமிழகம், கேரள மாநிலங்களில், தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ள பட்டாணியை காட்டிலும், ஆஸ்திரேலியன் கஸ்பா பீஸ் பட்டாணி அதிகம் விரும்பப்படுகிறது. எனவே, அதை தமிழகத்திற்கு இறக்குமதி செய்வது தொடர்பாக, சங்க நிர்வாகிகள் டில்லி சென்று, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக கூடுதல் செயலர் ஸ்ரீ சந்தோஷ்குமார் சாரங்கியை சந்தித்து கோரிக்கை வைத்தோம்.அப்போது, 'நிறுவனங்கள் சார்பாக இல்லாமல், தமிழக அரசின் சார்பாக கோரிக்கை வர வேண்டும், அவ்வாறு கோரிக்கை வந்தால், தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் வாயிலாக, 1 லட்சம் டன் வரை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்' என்று அவர் தெரிவித்தார். எனவே, ஆஸ்திரேலியன் கஸ்பா பீஸ் பட்டாணி இறக்குமதி செய்ய மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.இதனால், தமிழகத்தில் பட்டாணி பருப்பு மற்றும் பட்டாணி மாவு விலை குறைய வாய்ப்புள்ளது. அவை, ஏழை மக்கள் தினமும் பயன்படுத்தும் துவரம் பருப்பு, கொண்டை கடலைக்கு சிறந்த மாற்றாக இருக்கும்.இறக்குமதிக்கு அனுமதி கிடைத்தால், இந்த தொழிலை நம்பியுள்ள பல லட்சம் குடும்பங்கள் பயன்பெறும். எனவே, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து, தமிழக அரசு அனுமதி பெற்று தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.