| ADDED : ஆக 22, 2024 01:45 AM
புதுடில்லி: இந்தியாவில், வரும் 5 ஆண்டுகளில், 933 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக டெகாத்லான் நிறுவனம் அறிவித்துள்ளது.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு பொருட்கள் சில்லறை விற்பனை நிறுவனமான டெகாத்லான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்தியா முழுதும் 190 இடங்களில், எங்களது கிளைகளை விரிவுப்படுத்தவும், உள்ளூரில் உற்பத்தியை மேம்படுத்தும் நடவடிக்கையாக, அடுத்த 5 ஆண்டுகளில், 933 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளோம். தற்போது இந்தியாவில் உள்ள எங்களது விற்பனையகங்களில் விற்பனையாகும் பொருட்களில், 68 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இதனை, 2026ம் ஆண்டுக்குள், 85 சதவீதமாக அதிகரிக்க உள்ளோம். எங்களது உலகளாவிய விற்பனையகங்களில், இந்திய தயாரிப்புகளின் பங்களிப்பு கிட்டத்தட்ட 8 சதவீதமாக உள்ளது. அவை பெரும்பாலும், கிரிக்கெட் பேட், ஹாக்கி தொடர்பான விளையாட்டு உபகரணங்கள் ஆகும். அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் விற்பனையை இரு மடங்காக அதிகரிப்பதுடன், இந்தியாவை ஒரு முக்கிய உற்பத்தி மையமாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.